search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: ஆடுகளத்தை ஆய்வு செய்த ஸ்டீவ் ஸ்மித்- தொடரை வெல்லுமா இந்தியா?
    X

    3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: ஆடுகளத்தை ஆய்வு செய்த ஸ்டீவ் ஸ்மித்- தொடரை வெல்லுமா இந்தியா?

    • கேஎல் ராகுலுக்கு பதில் சுப்மன் கில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
    • மிட்செல் ஸ்டார்க், ஆல்-டவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தூர்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன.

    நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை தொடங்குகிறது. இப்போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் விராட்கோலி, புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர். தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் ரன் குவிக்காததால் நெருக்கடியில் உள்ளார்.



    அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதே வேளையில் அவருக்கு பதில் சுப்மன் கில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேல், பேட்டிங் கில் அசத்தி வருகிறார். ரோகித் சர்மா 183 ரன்னுட னும், அக்சர் பட்டேல் 158 ரன்னுடனும் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

    இத்தொடரில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா, அஸ்வின் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்களது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறுகிறார்கள். கடந்த 2 டெஸ்டில் ஜடேஜா 17 விக்கெட்டும், அஸ்வின் 14 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர். 3-து டெஸ்டிலும் ஜடேஜா, அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் நெருக்கடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணி கடந்த 2 டெஸ்டில் தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அந்த அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடினர். இதனால் வெற்றி கட்டாயத்தில் களம் இறங்குகிறது. மேலும் இந்த டெஸ்டில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும்.

    அந்த அணி கேப்டன் கம்மின்ஸ், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் சொந்த நாட்டுக்கு சென்று உள்ளார். இதனால் 3-வது டெஸ்டில் இருந்து அவர் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார்.

    அதேபோல் காயம் அடைந்த தொடக்க வீரர் டேவிட் வார்னரும் விலகி உள்ளார். அவர்களின் விலகல் ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. கேப்டன் பொறுப்பை ஸ்டீவன் சுமித் ஏற்றுள்ளனர். அந்த அணி பேட்டிங்கில் கவாஜா லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, ரென்ஷா உள்ளனர்.

    சுழற்பந்து வீச்சாளர்கள் நாதன் லயன், டாட் மர்பி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஆல்-டவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    3-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். இதனால் வெற்றிக்காக இந்திய வீரர்கள் தீவிர முனைப்பு காட்டுவார்கள். மேலும் இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவது உறுதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நாளை நடைபெற உள்ள 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்தூர் ஆடுகளத்தை ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆய்வு செய்தார்.

    Next Story
    ×