search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: அறிமுகமாகும் சர்பராஸ் கான்- துருவ் ஜூரல்?
    X

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: அறிமுகமாகும் சர்பராஸ் கான்- துருவ் ஜூரல்?

    • இங்கிலாந்து அணி இந்த தொடரில் 2 வேகப்பந்து வீரர்களுடன் விளையாட உள்ளனர்.
    • அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் சர்பராஸ் கான் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

    ராஜ்கோட்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை நிலவுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்தியாவின் அதிரடி இந்த போட்டியிலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 டெஸ்டில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி விலகினார். தற்போது தொடர் முழுவதும் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் ஆடவில்லை. காயம் காரணமாக அவர் 2-வது டெஸ்டில் விளையாடவில்லை. அதே நேரத்தில் கடந்த போட்டியில் ஆடாத ஜடேஜா அணிக்கு திரும்பி உள்ளார்.

    சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் ஆகிய டெஸ்டில் அறிமுகமாகிறார்கள். அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் சர்பராஸ் கான் இடம் பெற வாய்ப்பு உள்ளது. விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் பேட்டிங் தொடர்ந்து மோசமாக இருப்பதால் ஜூரலுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவேளை ரஜத் படிதார் சுழற்றிவிடப்பட்டால் தேவ்தத் படிக்கல் இடம் பெறுவார். அவரும் இதுவரை டெஸ்டில் விளையாடவில்லை.

    ஜடேஜா அணிக்கு திரும்பியதால் குல்தீப் யாதவ் அல்லது அக்ஷர் படேல் நீக்கப்படலாம். முகமது சிராஜ் முழு உடல் தகுதியுடன் இருந்தால் முகேஷ் குமார் இடம் பெறமாட்டார்.

    கடந்த டெஸ்டில் ஜெய்ஷ்வாலின் இரட்டை சதமும், சுப்மன்கில்லின் சதமும், 9 விக்கெட் வீழ்த்திய பும்ராவின் அபார பந்துவீச்சும் வெற்றிக்கு காரணமாக இருந்தது.

    இங்கிலாந்து அணி இந்த தொடரில் முதல் முறையாக 2 வேகப்பந்து வீரர்களுடன் விளையாட உள்ளனர். ஆண்டர்சனும், மார்க்வுட்டும் இங்கிலாந்தின் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.

    அந்த அணியின் பேட்டிங்கில் ஆலி போப், கிராவ்லி, பென்ஸ்டோக்ஸ் ஆகியோரும் பந்துவீச்சில் ஹார்ட்லே, ரேகான் அகமது, ஆண்டர் சன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். 2-வது டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வேட்கையில் இங்கிலாந்து அணி இருக்கிறது.

    நாளைய போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 'ஸ்போர்ட்ஸ் 18' சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×