என் மலர்
கிரிக்கெட் (Cricket)
கேப்டன் மாறப்போகும் விஷயம் எனக்கே "அப்போ தான்" தெரியும் - சி.எஸ்.கே. CEO
- சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
- சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி இருந்து வந்தார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 22) துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து, இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், சி.எஸ்.கே. அணியின் கேப்டன் பொறுப்பை எம்.எஸ். டோனி ருதுராஜ் கெய்க்வாட்-இடம் ஒப்படைப்பதாக அணி நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு டோனி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐ.பி.எல்.-இல் சென்னை அணி துவங்கப்பட்டதில் இருந்தே சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி செயல்பட்டு வந்தார்.
இடையில், ஒரு சீசனில் ரவீந்திர ஜடேஜா சிறிது காலம் கேப்டனாக செயல்பட்டார். எனினும், எம்.எஸ். டோனி அதே சீசனில் சென்னை அணியை வழிநடத்த துவங்கினார். தற்போது சென்னை அணிக்கு புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கேப்டன் மாறப்போகும் தகவல் தனக்கே தாமதமாகத் தான் தெரியும் என சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஒ. தெரிவித்துள்ளார்.
2024 ஐ.பி.எல். தொடரின் கேப்டன்கள் பங்கேற்கும் போட்டோஷூட் சமீபத்தில் நடைபெற்றது. அந்த வகையில், போட்டோஷூட் துவங்க சிறிது நேரம் இருக்கும் போது தான், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்ற தகவல் தனக்கு தெரிவிக்கப்பட்டது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.