search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடக் கூடாது... கம்ரான் அக்மல் அதிருப்தி
    X

    கம்ரான் அக்மல்

    டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடக் கூடாது... கம்ரான் அக்மல் அதிருப்தி

    • ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும் என கம்ரான் அக்மல் வலியுறுத்தினார்

    கராச்சி:

    பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். மேலும், ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் கூறினார்.

    ஜெய் ஷாவின் இந்த கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சமூகத்திடம் இருந்து கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்தது. ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்பட்டால், இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவிப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "ஜெய் ஷாவின் இந்த பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் கடந்த முறை இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் விளையாடிய போது அவர் மைதானத்தில் நேரில் வந்து பார்த்தார். ஜெய் ஷா விளையாட்டில் அரசியலை கொண்டுவர கூடாது. ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும். அப்படி இல்லை என்றால் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க கூடாது. இதே போன்று எவ்வித ஐசிசி போட்டியிலும் பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதக் கூடாது' என்றார்.

    வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால், பிசிசிஐ-யின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

    Next Story
    ×