என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
தாயின் ஆசை நிறைவேறியது- லபுஸ்சேன் உருக்கம்
- 29 வயதான லபுஸ்சேன் தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர்.
- அவருக்கு 10 வயதாக இருக்கும் போது அவரது பெற்றோர் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தனர்.
புளோம்பாண்டீன்:
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது ஆட்டம் புளோம்பாண்டீன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 49 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 113 ரன்களுடன் (16.3 ஓவர்) தத்தளித்தது.
இதற்கிடையே, 3-வது வரிசையில் களம் கண்ட கேமரூன் கிரீனுக்கு (0) வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா வீசிய 'பவுன்சர்' பந்து ஹெல்மெட்டோடு இடது காதோரம் பலமாக தாக்கியது. இதனால் வீக்கம் ஏற்பட்டு தலைக்குள் அதிர்வை சந்தித்ததால், வெளியே அழைத்து செல்லப்பட்டு ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஓய்வு அளிப்பது என்று அணி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து பந்து தலையில் தாக்கினால் மாற்று வீரரை சேர்க்கும் விதிப்படி கேமரூன் கிரீனுக்கு பதிலாக மார்னஸ் லபுஸ்சேன் சேர்க்கப்பட்டார்.
8-வது விக்கெட்டுக்கு லபுஸ்சேனும், ஆல்-ரவுண்டர் ஆஷ்டன் அகரும் கைகோர்த்து அணியை நெருக்கடியில் இருந்து காப்பாற்றினர்.
இறுதியில் ஆஸ்திரேலியா 40.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 225 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. லபுஸ்சேன் 80 ரன்களுடனும் (93 பந்து, 8 பவுண்டரி), ஆஷ்டன் அகர் 48 ரன்களுடனும் (69 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
லபுஸ்சேன் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 29 வயதான லபுஸ்சேன் தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர். அவருக்கு 10 வயதாக இருக்கும் போது அவரது பெற்றோர் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வரும் லபுஸ்சேன் தற்போது தனது பூர்விக அணியை அதுவும் மாற்று வீரராக நுழைந்து தோற்கடித்து அசத்தி இருக்கிறார்.
இந்த தொடருக்கான அணியில் முதலில் லபுஸ்சேன் தேர்வு செய்யப்படவில்லை. ஸ்டீவன் சுமித் காயத்தால் விலகியதால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தாயின் ஆசை நிறைவேறியதாக லபுஸ்சேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முந்தைய நாள் இரவு எனது தாயார் என்னிடம் இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக நீ விளையாடுவாய் என்று கூறினார். அதற்கு நான், 'களம் காணும் அணியில் எனக்கு இடமில்லையே' என்று கூறியதும் மிகவும் வருந்தினார். முதல் பாதியில் நான் விளையாடாவிட்டாலும் கூட அவர் ஸ்டேடியத்தில் அமர்ந்து ஆட்டம் முழுவதையும் கண்டுகளித்தார். எதிர்பாராத விதமாக எனது அம்மாவின் ஆசைப்படி நானும் விளையாடும் வாய்ப்பை பெற்று விட்டேன். உண்மையில் எனது உணர்வை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் நீக்கப்பட்ட போது, நான் அதிர்ச்சி அடையவில்லை. ஏனெனில் கடந்த 10-12 ஒரு நாள் போட்டிகளில் நான் போதுமான அளவுக்கு ரன் எடுக்கவில்லை. அணி தேர்வாளர்களிடம், 'ஏன் இடம் கிடைக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது' என்று கூறினேன். அத்துடன் இன்னும் பேட்டிங்கில் மிடில் வரிசையில் இருக்க விரும்புவதாகவும் சொன்னேன். அணியைவிட்டு வெளியே இருக்கும் சமயத்தில், எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்' என்றார்.
2-வது ஆட்டம் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்