search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தோல்விகளால் தூக்கமும் போச்சு... மன உறுதியும் போச்சு: பாகிஸ்தான் பேட்ஸ்மேன்
    X

    ஷான் மசூத்

    தோல்விகளால் தூக்கமும் போச்சு... மன உறுதியும் போச்சு: பாகிஸ்தான் பேட்ஸ்மேன்

    • இந்தியா, ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியடைந்ததால் அரையிறுதி வாய்ப்பு மங்கியது
    • இந்தியா, தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு

    டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது பாகிஸ்தான். ஆனால் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியடைந்ததால் புள்ளிகள் பட்டியலில் இதுவரை 2-வது இடம் பிடிக்க முடியாமல் உள்ளது.

    நாளை கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஏறக்குறைய பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு மங்கிவிட்டது. இருந்தாலும் அடுத்த அணிகளின் செயல்பாடுகளை பொறுத்து வாய்ப்புள்ளது.

    தற்போது இந்தியா 6 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +0.730) முதல் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +1.441) 2-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் (ரன்ரேட்- +1.117) 3-வது இடத்தில் உள்ளது.

    நாளை தென்ஆப்பிரிக்கா நெதர்லாந்தையும், இந்தியா ஜிம்பாப்வேவையும், பாகிஸ்தான் வங்காளதேசத்தையும் எதிர்த்து விளையாட இருக்கின்றன.

    இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் வெற்றி பெற்றால் இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை இந்தியா தோல்வியடைந்தால் பாகிஸ்தான் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும். அப்படி இல்லாமல் இந்தியா வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும். இல்லையெனில் தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டால் தென்ஆப்பிரிக்காவுடன் ரன்ரேட் அடிப்படையில் போட்டியிட்டு அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் நாளைய ஆட்டம் குறித்து பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷான் மசூத் கூறியதாவது:-

    இழந்த தருணங்கள் எங்களுக்கு விலைமதிப்புமிக்கது என்பது நிரூபணமாகி உள்ளது. ஏனென்றால் நாங்கள் இன்னும் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடத்திற்கு முன்னேற முடியவில்லை.

    அதேசமயம் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. வாழ்க்கை நமக்கு கடினமான பாடங்களை கற்று தருகிறது. அதில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தோல்வி பாகிஸ்தான் வீரர்களின் தூக்கத்தை தொலைத்ததுடன், அவர்களின் மன உறுதியையும் கெடுத்துவிட்டது.

    அந்த பின்னடைவுகளுக்குப் பிறகு நாங்கள் எவ்வாறு மீண்டு வந்தோம் என்பது எங்கள் தன்மையை காட்டியது. அது ஒரு பெரிய விஷயம்.

    தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு சிறந்த விஷயம், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதுதான். சமநிலையான பார்வையில் இருந்து நாம் பார்த்தோம் என்றால், ஜிம்பாப்வேயுடனான தோல்விக்குப்பின் நாங்கள் சிறப்பாக விளையாடி மீண்டு வந்தோம்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தியது. பின்னர், நாங்கள் நன்றாக பந்து வீசி ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தோம். மழைக்குப்பின் கூட நாங்கள் எங்களுடைய உத்வேகத்தை இழக்கவில்லை.

    ஆகவே, கடைசி போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இரண்டு புள்ளிகள் பெறுவதில் கவனம் செலுத்துவோம். இதுதான் எங்கள் கையில் உள்ளது. எங்களுடைய குரூப்பில் கடைசி பந்து வீசும் வரை நாங்கள் நம்பிக்கையுடன் இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×