search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எனது அடுத்த இலக்கு சீனியர் உலக கோப்பையை வெல்வது - ஷபாலி வர்மா உறுதி
    X

    ஷபாலி வர்மா

    எனது அடுத்த இலக்கு சீனியர் உலக கோப்பையை வெல்வது - ஷபாலி வர்மா உறுதி

    • ஜூனியர் உலக கோப்பையை இந்திய பெண்கள் அணி கைப்பற்றி அசத்தியது.
    • பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா ருசித்த முதல் உலக கோப்பை இதுவாகும்.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவில் நடந்த பெண்களுக்கான முதல் ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்கு உட்பட்டோர்) இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றி வரலாறு படைத்தது. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா ருசித்த முதல் உலக கோப்பை இது தான்.

    அரியானாவைச் சேர்ந்த ஷபாலி வர்மா ஜூனியர் உலக கோப்பை தொடரில் 7 ஆட்டங்களில் களம் இறங்கி 172 ரன்களுடன், 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    அடுத்து இதே தென்ஆப்பிரிக்காவில் 10 அணிகள் பங்கேற்கும் 8-வது சீனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 10-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது. இதிலும் இந்தியா அசத்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜூனியர் உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய 19 வயதான ஷபாலி வர்மா, சீனியர் அணியிலும் பிரதான பேட்டராக அங்கம் வகிக்கிறார்.

    இந்நிலையில், எனது அடுத்த இலக்கு சீனியர் உலக கோப்பையை வெல்வது என ஷபாலி வர்மா தெரிவித்தார்.

    என்னிடம் என்ன இலக்கு இருக்கிறதோ அதில் எனது முழு கவனமும் இருக்கும். அந்த வகையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் நுழைந்தபோது, உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே எனது முழு கவனமும் இருந்தது. வீராங்கனைகளிடம் நான் சொன்ன ஒரே விஷயம், 'உலகக் கோப்பையை வென்றாக வேண்டும். அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம்' என்பதுதான். அதை இன்று செய்து காட்டியிருக்கிறோம்.

    இந்த வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கையோடு அடுத்து சீனியர் உலக கோப்பை போட்டிக்குச் செல்வேன். இந்த வெற்றியை மறந்துவிட்டு சீனியர் அணியினருடன் கைகோர்த்து அந்த உலக கோப்பையை வெல்ல முயற்சிப்பேன்.

    என்னைப் பொறுத்தவரை இதை மிகப்பெரிய சாதனையாக பார்க்கிறேன். இதில் கிடைத்த அனுபவங்களில் இருந்து மேலும் கற்றுக் கொள்வேன். இந்தியாவுக்காக தொடர்ந்து நிறைய ரன்கள் குவிக்க முயற்சிப்பேன். இந்த ஒரு உலகக் கோப்பையோடு மனநிறைவு அடைந்துவிட போவதில்லை. இது வெறும் தொடக்கம் தான் என குறிப்பிட்டார்.

    Next Story
    ×