search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலக கோப்பை தகுதிச்சுற்று - அயர்லாந்து, இலங்கை அணிகள் அபார வெற்றி
    X

    உலக கோப்பை தகுதிச்சுற்று - அயர்லாந்து, இலங்கை அணிகள் அபார வெற்றி

    • முதல் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை இலங்கை வீழ்த்தியது.
    • 2வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றது.

    ஹராரே:

    உலக கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.

    முதல் ஆட்டத்தில் இலங்கை, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்ச தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதம் அடித்த நிசங்கா 75 ரன்கள் எடுத்து வெளியேறினார். பொறுபுடன் ஆடிய அசலங்கா அரை சதம் விளாசி 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஸ்காட்லாந்து சார்பில் கிறிஸ் க்ரீவ்ஸ் 4 விக்கெட்டும், மார்க் வாட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 246 ரன்கள் இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில் ஸ்காட்லாந்து அணி 29 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் அரைசதம் அடித்தார்.

    இலங்கை அணி சார்பில் மகேஷ் தீக்சனா 3 விக்கெட்டும், ஹசரன்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    2வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற யுஏஇ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து அதிரடியில் மிரட்டியது. பால் ஸ்டிர்லிங் 162 ரன்கள் அடிக்க அயர்லாந்து அணி 349 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய யு.ஏ.இ. 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் அயர்லாந்து 138 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அயர்லாந்து தான் ஆடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

    ஏற்கனவே ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×