search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்
    X

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்

    • முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
    • முருகருக்கு மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கிறது.

    ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

    இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம். வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    ஆடி கிருத்திகை விழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆடிக்கிருத்திகை விழா கடந்த 27-ந் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கி, நேற்று ஆடிப்பரணியும், இன்று ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பம், நாளை இரண்டாம் நாள் தெப்பம், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பம் நடக்கிறது.

    இந்த 3 நாட்கள் தெப்ப உற்சவத்தில் முருகர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    இந்த விழாவில் பக்தர்களின் வசதிக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், பொது தகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் மலைக்கோவில், மலை அடிவாரம், மக்கள் அதிகம் கூடும் பகுதியில் 160 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

    திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பாக சென்னை, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், குடியாத்தம், ஆரணி, திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம், சோளிங்கர், செய்யார், வந்தவாசி, ஆம்பூர், பேரணாம்பட்டு, பள்ளிப்பட்டு, திருப்பதி, சித்தூர், புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு 560 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இந்த ஆடி கிருத்திகை விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

    Next Story
    ×