search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிறுவாபுரி முருகன் கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்
    X

    சிறுவாபுரி முருகன் கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்

    • சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
    • திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரகதகல்லால் ஆன மயில், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் இருப்பதும், திருமண கோலத்தில் வள்ளி-மணவாளன் காட்சியளிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    சிறுவாபுரி கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரங்கள் செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு, நிலம், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பக்தர்களின் நீண்டநாள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    மேலும் இந்த கோவில் செவ்வாய் கிரகத்துக்கு உகந்த கோவில் என்றும் கூறப்படுகிறது. இதனால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்களின் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் சிக்கி திணறி வருகிறார்கள்.

    இதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்தி ருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை நிலவிவருகிறது. ரூ.100 சிறப்பு கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து செல்கிறார்கள்.

    இதேபோல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதிலும், வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. சிறுவாபுரி-புதுரோடு சாலையிலும், சிறுவாபுரி-அகரம் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே செவ்வாய்க்கி ழமை மற்றும் விழா காலங்களில் அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரையில் நடை திறந்து பக்தர்கள் தரிசனம் நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-

    சிறுவாபுரி கோவிலில் முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட நாட்களில் விடியற்காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு போதுமான அளவு குடிநீர் வசதி, நிழல் தரும் பந்தல் வசதி, தேவையான கழிவறை வசதி தேவையான அளவு இல்லை.

    மேலும், கோவிலுக்கு செல்லும் வழியையும், தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வழியையும் ஒவ்வொரு வாரமும் மாற்றி, மாற்றி அமைப்பதால் பக்தர்கள், முதியவர்கள், பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்டோர் கோவிலுக்குள் செல்வதிலும், வெளியே வருவதிலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    சாலையின் இருபுறமும் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளனர். காவல்துறையினரும், வருவாய் துறையினரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஒருவருக்கு, ஒருவர் ஒத்துழைப்பு இல்லாததால் சாலை ஓரம் உள்ள கடைகளை அப்புறப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.

    இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை மற்றும் விழா காலங்களில் பக்தர்கள் தரிசன நேரத்தை அதிகரித்தால் கூட்ட நெரிசல் ஏற்படாது. வாகன நெரிசலை தவிர்க்க கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்து போக்கு வரத்தை சரிசெய்யவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×