என் மலர்
வழிபாடு
மதுரை சித்திரை திருவிழா: சுவாமி வீதி உலா வரும் சாலைகளை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
- மதுரை சித்திரை பெருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வைபவம் மே 2-ந்தேதி நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. விழாவில் வருகிற 30-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மே1-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.
விழாவில் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வைபவம் மே-2 ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்பத்தில் நடைபெறும். மே 3-ந் தேதி மாசி வீதிகளில் தேர் திருவிழா நடைபெறுகிறது. 4-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.
திருவிழா நடைபெறும் நாட்களில் மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் வலம் வருவர். அவ்வாறு வலம் வரும் பகுதிகளான விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு, நான்கு மாசி வீதிகளிலும் போடப்படும் பந்தல்களை சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30 அடி உயரத்திற்கு மேல் அமைத்து கொள்ள வேண்டும். மேலும் வேப்பிலைத் தோரணங்கள் ஆகியவற்றினையும் சுவாமி வாகனங்கள் தட்டாமல் அமைத்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சுவாமிகள் வலம் வரும் பகுதிகளான தெற்குமாசி வீதியில் கடந்த சில நாட்களாக சாலை சீரமைப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதனை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் கோவிலுக்கு வரும் பாதைகளான டவுன்ஹால் ரோடு, மேலகோபுரத்தெரு, மாசி வீதிகள் என பல இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அதனை உடனே சீரமைக்க வேண்டும். இது தவிர சாலைகளில் குறுக்கே பல இடங்களில் தனியார் நிறுவன கேபிள் வயர்கள் செல்கிறது.
மேலும் மின்வாரிய வயர்களும் ஒரு சில இடங்களில் தாழ்வாக இருக்கிறது. அதனையும் சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.