என் மலர்
வழிபாடு
பழனி கோவிலில் டிச.25-ந்தேதி முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு
- 80 சதவீத கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்துள்ளன.
- கோவில் ராஜகோபுரத்தில் கலசம் பொருத்தி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு பாலாய பணிகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் திருப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் திருப்பணிகளுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக கோவிலில் உள்ள கோபுரங்கள், மண்டபங்கள், சேதமடைந்த சிற்பங்கள், சன்னதிகளின் விமானம் ஆகியவற்றை புனரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
கோவில்ராஜகோபுரத்தில் கலசம் பொருத்தி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளைமறுநாள்(25-ந்தேதி) காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கிறார். கும்பாபிஷேகத்திற்கு ஒருமாதமே உள்ளதாலும், அதனைதொடர்ந்து தைப்பூசத்திருவிழா தொடங்க உள்ளதாலும் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பல்வேறு ஊர்களில் இருந்து பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்துவர தொடங்கி உள்ளனர். கடும் பனி நிலவி வரும் போதிலும் இரவு பகலாக பக்தர்கள் அதிகளவில் பழனியை நோக்கி நடந்து செல்கின்றனர்.