search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
    X

    பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

    • பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • வருகிற 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் முன்பதிவு செய்யலாம்.

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமிகோவிலில் வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்துக்கான பூர்வாக பூஜைகள் வருகிற 18ந் தேதி தொடங்குகிறது. 23ந் தேதி மாலை முதல் கால யாகை பூஜை அதனைத் தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமி ஆவாஹனம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து பழனி கோவில் மண்டபத்தில யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகுறது.

    இதில் 90க்கும் மேற்பட்ட யாக குண்டங்கள் அமைக்கப்பட உள்ளன. யாகசாலையில் வண்ண அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    கும்பாபிஷேகத்தில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு இணையதளம் மூலம் கட்டணமில்லா முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 பேர் மட்டுமே கும்பாபிஷேகத்தில கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    கோவிலின் இணையதளம் மற்றும் இத்துறைக்கான வலைதளங்களில் பக்தர்கள் வருகிற 18ந் தேதி முதல் 20ந் தேதி வரை கட்டணமில்லா முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முன்பதிவுக்கு பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போட், வங்கி சேமிப்பு கணக்கு, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, தேசிய அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும். மேலும் செல்போன் எண்ணுடன் மின் அஞ்சல் முகவரி இருப்பின் அதனையும் இணைக்க வேண்டும்.

    21ந் தேதியன்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு அந்த எண் அல்லது மின் அஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். உறுதி செய்யப்பட்ட மின் அஞ்சல், குறுந்தகவல் கிடைக்கப்பெற்றவுடன் 23ந் தேதி முதல் 24ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அந்த கட்டணமில்லா சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

    குறிப்பிட்ட நேரத்துக்கு பின்பு வருபவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் சேவைக்கு சலுகை வழங்கப்படாது. படிப்பாதை வழியாக மட்டுமே மலைக்கோவிலுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே பழனி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்துக்கு முன்பாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தொடர் விடுமுறை என்பதாலும் கும்பாபிஷேகத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதாலும் பழனி முருகனை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×