search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தைப்பூச திருவிழா: திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்!
    X

    தைப்பூச திருவிழா: திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்!

    • திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • பாதயாத்திரையாக பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தரிசனம்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது.

    அந்த வகையில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இ்ந்த ஆண்டு கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதற்கிடையே, சுவாமி சண்முகரை கடலில் கண்டெடுத்த 369-ம் ஆண்டு தினமான இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

    காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையாகி, 4.30 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதி உலா வந்து சேர்கிறார்.

    தைப்பூசத்தை முன்னிட்டு நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று, அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

    தைப்பூச திருவிழாவிற்கு தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் தரிசனம் செய்து செல்கின்றனர்.

    நாளை நடக்கும் தைப்பூசம் திருவிழாவிற்கு இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    Next Story
    ×