search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் கோவில்களில் ரதசப்தமி விழா 28-ந்தேதி நடக்கிறது
    X

    திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் கோவில்களில் ரதசப்தமி விழா 28-ந்தேதி நடக்கிறது

    • சூரியன் அவதாரத்தினத்தை ரத சப்தமியாகக் கொண்டாடுகிறார்கள்.
    • இதை சூரிய ஜெயந்தி என்றும் அழைப்பார்கள்.

    சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் ரத சப்தமி முக்கியமானது. சூரியன் அவதாரத்தினத்தை ரத சப்தமியாகக் கொண்டாடுகிறார்கள். சூரிய ஜெயந்தி என்றும் அழைப்பார்கள். அதன்படி வருகிற 28-ந்தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட உள்ளூர் வைணவ கோவில்களில் ரத சப்தமி விழா நடக்கிறது.

    கோவில்களில் ரத சப்தமிக்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மம் திருப்பதியில் இருந்தபடியே அனைத்துக் கோவில் அதிகாரிகளை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடி ஆலோசனை நடத்தினாா்.

    அப்போது இணை அதிகாரி வீரபிரம்மன் பேசியதாவது:-

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில், நாராயணவனம், நாகலாபுரம், கடப்பா ஆகிய கோவில்களில் ரதசப்தமியை முன்னிட்டு வாகனச் சேவையுடன் மூல மூர்த்தியை முறைப்படி தரிசனம் செய்ய அனைத்து முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். வாகனச் சேவைக்கு பயன்படுத்தக்கூடிய வாகனங்களை முன்கூட்டியே பரிசோதிக்க வேண்டும்.

    கடப்பாவில் உள்ள லட்சுமி வெங்கடேஸ்வரா் கோவிலில் தேரோட்டத்துக்காக தேர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்தந்தக் கோவில்களில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் ஏற்பாடு செய்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    அதேபோல் ஜம்மு, சென்னை, ராமச்சோடவரம், சீ்தம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் மகா கும்பாபிஷேகம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்தந்தக் கோவில்களுக்கு தேவையான நகைகள், கற்சிலைகள், பஞ்சலோக சிலைகள், அர்ச்சகர், ஊழியர்கள், இதர பிரதிநிதிகள், பணியாளர்கள், சுகாதார ஏற்பாடுகள் போன்றவை விவாதிக்கப்பட்டது.

    கோவில்கள் தொடர்பான பணிகள் முன்னேற்றம் குறித்து பொறியியல் துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்குதல், மின் விளக்கு அலங்காரம், மலர் அலங்காரம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கோவில் அதிகாரிகள், பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×