search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளை அருகே வாலிபர் கொலையில்  நண்பர்கள் 2 பேர் கைது
    X

    கைது செய்யப்பட்ட மதியழகன், சுரேஷ்.

    திசையன்விளை அருகே வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது

    • கொலை செய்யப்பட்ட முத்தையா, ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்பட்டது.
    • சுரேசும், மதியழகனும் சேர்ந்து கத்தியால் முத்தையாவை குத்திக்கொலை செய்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமி தாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் முத்தையா(வயது 19). இவர் திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கொலை

    நேற்று முன்தினம் இரவில் முத்தையா தன்னுடைய நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். பின்னர் நீண்ட நேர மாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    உடனே அவரை குடும்பத்தினர், உறவினர்கள் தேடிப் பார்த்தபோது சுவாமிதாஸ் நகரில் உள்ள காட்டு பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    நண்பர்கள் சிக்கினர்

    கொலை செய்யப்பட்ட முத்தையா, ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. எனவே காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக அவருடைய நண்பர்களே அவரை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக முத்தையாவின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, நண்பர்களில் ஒருவரின் கையில் காயம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.

    அப்போது அவர் கூறுகையில், எங்களுடைய நண்பரான அப்புவிளை கக்கன் நகரை சேர்ந்த சுரேஷ்(19), மதியழகன்(31) ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் காட்டுப்பகுதியில் வைத்து மது அருந்தினோம்.

    அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சுரேசும், மதியழகனும் சேர்ந்து கத்தியால் முத்தையாவை குத்திக்கொலை செய்தனர். அதனை தடுக்க சென்ற எனக்கு காயம் ஏற்பட்டது என்றார்.

    இதையடுத்து கொலை செய்த சுரேஷ் மற்றும் மதியழகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே முத்தையா காதல் விவகாரத்தில் தான் கொலை செய்யப்பட்டார் என்று கூறி அவரது உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் போலீசார் அந்த கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×