search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை போத்தனூரில் 1000 போதை மாத்திரைகளுடன் 2 பேர் கைது
    X

    கோவை போத்தனூரில் 1000 போதை மாத்திரைகளுடன் 2 பேர் கைது

    • போத்தனூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
    • கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்தபோது சிக்கினர்

    குனியமுத்தூர்,

    கோவையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. கல்வி மற்றும் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோவையில் வந்து தங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் கோவையில் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.இதனை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த கும்பலை கண்காணித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என மருந்துக் கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

    கல்லூரிகளில் போதை தொடர்பான விழிப்புணர்வை போலீசார் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் போத்தனூர் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பேக்கரி அருகே சிலர் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து போத்தனூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த போத்தனூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளி இம்ரான்கான் (வயது 26), எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்த முகமது யூசுப் (25) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1041 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×