search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே 278 பவுன் நகை கொள்ளை வழக்கில் 200 சி.சி.டி.வி. கேமராக்கள் ஆய்வு
    X

    நாங்குநேரி அருகே 278 பவுன் நகை கொள்ளை வழக்கில் 200 சி.சி.டி.வி. கேமராக்கள் ஆய்வு

    • 2 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி சிவா தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன்(வயது 45). இவர் மூலைக்கரைப்பட்டி பஜார் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஷாப்பிங், பாத்திரக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையின் முதல் தளத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 22-ந்தேதி இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை ஆரோக்கிய ரெமன் கடையை திறந்தபோது கடையின் மாடியில் இருந்த ஜன்னல் உடைக்கப்பட்டு அடகு கடையில் லாக்கரில் வைத்திருந்த 278 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை சரக டி.ஐ.ஜி. மூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் பிரசன்ன குமார் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    அந்த கடையின் பின்புறத்தில் மர்ம நபர்கள் சென்று, அதன் அருகே இருந்த கடையின் காம்பவுண்டு சுவரில் ஏறி, கொள்ளை நடந்த கடையின் பின்புற ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கடையின் அமைப்பை பற்றி முழுமையாக தெரிந்த உள்ளூர் நபர்களின் உதவியுடன் வெளியில் இருந்து வந்த நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

    சம்பவம் நடந்த கடையில் சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் இல்லை. இதனால் பஜார் பகுதியில் இருந்த மற்ற கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த நபர்கள் 2 பேரும் கொள்ளை நடந்த கடை முன்பு சிறிது நேரம் நின்று விட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நகர்கிறது.

    போலீசார் சந்தேகம் அடைந்த அந்த மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் தொடர்ந்து ஒரு காரும் செல்கிறது. அந்த கார் சென்ற திசையை நோக்கி தனிப்படையினரும் சென்று வருகின்றனர். அந்த கார் செல்லும் பாதையில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போதும் அந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து கார் செல்கிறது. இதனால் கொள்ளை அடித்த நகைகளை அந்த காரில் எடுத்துக் கொண்டு அந்த நபர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

    அதே நேரத்தில் கேமராவில் பதிவாகியுள்ள உருவங்களை வைத்து 2 பேரை போலீசார் சந்தேகத்தில் தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த பகுதிகளில் அதிகம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்களையும் டவர் மூலமாக சோதனை செய்து வருகின்றனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களாக 2 பேரை சந்தேகப்படுகிறோம். மேலும் 1 கார், மோட்டார் சைக்கிள் இந்த திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கொள்ளையர்கள் சிக்கிவிடுவார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் சாதாரண டீக்கடைகளில் கூட சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி வைத்துள்ளனர். இவ்வளவு நகைகள் உள்ள பகுதியில் பொருத்தப்படாமல் இருக்கிறது. அனைத்து வணிகர்களும் கண்டிப்பாக தங்களது கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். அதுவே அவர்களது உடைமைகளை பாதுகாக்க பெருமளவு உதவும் என்று கூறினர்.

    Next Story
    ×