என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.1000கோடி நிலுவை தொகையை வழங்க அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை
திருப்பூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர், அலுவலர், அதிகாரிகள், ஊழியர் உள்ளிட்ட பணியிடங்களில் பணியாற்றி கடந்த, 2016 முதல் தற்போது வரை 85 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை அவ்வப்போது உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிடுகிறது.
அதனை மாநில அரசு அமல்படுத்துகிறது. கடந்த 2016ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அதன் பின் தற்போது வரை, 7 ஆண்டுகளாக வழங்காமல் நிலுவையில் உள்ளது. இது குறித்து போக்குவரத்து தொழிலாளர் ஓய்வூதியர் கூட்டமைப்பு மாநில துணை பொது செயலாளர் செல்வராஜ் கூறியதாவது:-
அகவிலைப்படி உயர்வு கணக்கிட்டு மின்வாரியம் உள்ளிட்ட பிறகு அரசுதுறை ஓய்வூதியருக்கு வழங்கப்படுகிறது. போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு மட்டும் வழங்கப்பட வில்லை.
விபத்தில்லாமல், இரவு, பகலும் பஸ் ஓட்டி இக்கட்டான சூழலில் வருவாய் பெற உழைத்த டிரைவர், நடத்துனர்கள் குடும்பங்கள் பல தற்போது வாழ, வழியின்றி வறுமையில் உள்ளனர். தமிழக முதல்வர் மனது வைத்து போக்குவரத்து ஓய்வூதியருக்கு நிலுவை உள்ள அகவிலைப்படி உயர்வு தொகை ரூ. 1,034 கோடியை 2020க்கு பின் ஓய்வு பெற்றவருக்கு வழங்கினால் வாழ்வதாரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






