என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டடம் நிலவள வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது
குண்டடம்:
குண்டடம் கூட்டுறவு நிலவள வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குண்டடம் நகர் கோவை ரோடு, ஐயப்பன் கோயில் வீதியில் கூட்டுறவு நிலவள வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மே 31-ந்தேதியன்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள் வங்கியின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். டேபிள்கள், பீரோக்களை திறந்து தேடியும் கொள்ளையர்களுக்கு ஏதும் கிடைக்காததால் திரும்பி சென்றுவிட்டனர்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக வங்கியின் செயலாளர் ஓம்கண்ணப்பன் குண்டடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். குண்டடம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப், முருகேசன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் குண்டடம் அருகே சூரியநல்லூர் போலீஸ் செக்போஸ்டில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நிலையில் வந்த பைக்கை நிறுத்த சைகை செய்தபோது, அந்த பைக்கை ஓட்டி வந்தவர் திடீரென வேகமாக ஓட்டி தப்ப முயன்றார். சுதாரித்துக் கொண்ட போலீசார் துரத்திச் சென்று அந்த பைக்கை மடக்கி அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தபோது, அவர்கள் 3பேரும் கூட்டுறவு நிலவள வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் தொடர்ந்து விசாரித்தபோது, கர்நாடக மாநிலம் கோலார்கள்ளி பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத்(வயது30), கொசன்நகரா பகுதியைச் சேர்ந்த தேவராஜா(37), கெல்லோஹாட்டா பகுதியைச் சேர்ந்த அஸ்வத்(31) என்பது தெரியவந்தது. 3பேரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






