search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் ரூ.2,755 கோடி சுயஉதவி குழு கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
    X

    தமிழகத்தில் ரூ.2,755 கோடி சுயஉதவி குழு கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

    • இந்திய கூட்டுறவு வாரவிழா சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது.
    • பயிர்க்கடன் ரூ.10 ஆயிரத்து 292 கோடி கொடுக்கப்பட்டது.

    சென்னை :

    கோவையில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய கூட்டுறவு வாரவிழா தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகில இந்திய கூட்டுறவு வாரவிழா வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது. கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், கூட்டுறவு சங்கங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை கவுரவிப்பதற்கும், கூட்டுறவு நோக்கத்தை மக்களிடத்தில் கொண்டுசேர்த்து, அதை சிறப்பாக வழிநடத்துவதற்கும் இந்த கூட்டுறவு வார விழா மிகப்பயனுள்ளதாக இருக்கும்.

    கூட்டுறவின் நோக்கம் என்பது பொருளாதாரத்தில் அடித்தட்டில் இருக்கின்ற மக்களுக்கு அவர்கள் செய்கின்ற விவசாயமாக இருந்தாலும், நெசவுத்தொழிலாக இருந்தாலும், கைவினைஞர்களாக இருந்தாலும், அவர்களே உறுப்பினர்களாக பதிவு செய்து ஒரு கூட்டமைப்பாக ஒரு சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடனை வழங்கி சேவை செய்வதாகும்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வட்டியில்லாமல் கடன் வழங்கியதிலும் தமிழகம்தான் முன்னோடி. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் வட்டியில்லாமல் தொடக்க வேளாண்மை வங்கிகளில் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். எவ்வளவு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான நகைக்கடன் தள்ளுபடியில் ரூ.5,018 கோடி கணக்கெடுத்து, இதுவரை ரூ.4,888.88 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. சுயஉதவி குழு கடனை பொறுத்தவரை ரூ.2,755 கோடி வரை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு கொடுத்திருக்கிறோம். பயிர்க்கடன் ரூ.10 ஆயிரத்து 292 கோடி கொடுக்கப்பட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டு கூட்டுறவுத்துறையில் இருந்த வைப்பீடு ரூ.67 ஆயிரம் கோடிதான்.

    இந்த ஆண்டு இந்த 6 மாத காலத்தில் ரூ.66 ஆயிரம் கோடி வந்துவிட்டது. அந்த அளவுக்கு மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால்தான் மக்கள் இதில் வைப்பீடு செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×