என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு பஸ், ரெயில் நிலையத்திற்கு தொடர்ந்து 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்- வாலிபர் சிறையில் அடைப்பு
    X

    ஈரோடு பஸ், ரெயில் நிலையத்திற்கு தொடர்ந்து 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்- வாலிபர் சிறையில் அடைப்பு

    • போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
    • சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் மர்ம பொருள் எதுவும் சிக்கவில்லை.

    ஈரோடு:

    சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை ஒரு போன் வந்தது.

    அதில் பேசிய மர்ம நம்பர் ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் ஈரோடு பஸ் நிலையத்தில் வெடி குண்டு வைத்துள்ளதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்க போவதாகவும் கூறிவிட்டு போனின் இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்னை போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் உஷாரான போலீசார் உடனடியாக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு சோதனையிட சென்றனர்.

    மேலும் இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுடன் மோப்பநாய் கயல் வரவழைக்கப்பட்டது.

    ஈரோடு ரெயில் நிலையம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சல்லடை போட்டு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

    இதேபோல் டவுன் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் போலீ சார் ஈரோடு பஸ் நிலையத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ரேக்காக சென்று சோதனையிட்டனர்.

    ஈரோடு மணிக்கூண்டு பகுதிகளிலும் ஒவ்வொரு பகுதியாக சென்று சோதனையிட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் மர்ம பொருள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனால் ஈரோடு மாநகர் முழுவதும் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    இதனையடுத்து வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். போலீஸ் கட்டுப்பாட்டுக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நபர் இருக்கும் பகுதியை போலீசார் ட்ராக் செய்தனர்.

    இதில் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (34) என தெரிய வந்தது. அவரை பிடிக்க ஈரோடு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர்.

    ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் சுற்றித்திரிந்த சந்தோஷ்குமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் சந்தோஷ்குமார் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி தெரிந்து உள்ளார். இவரது நடவடிக்கை பிடிக்காமல் முதல் மனைவி மற்றும் 2-ம் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.

    அவ்வப்போது கிடைக்கும் வேலையை பார்த்து சுற்றி வந்துள்ளார். சந்தோஷ் குமார் ஏற்கனவே 2019-ம் ஆண்டு மற்றும் 2021-ம் ஆண்டு என 2 முறை இதேபோன்று சென்னை காவல் கட்டு ப்பாட்டு அறைக்கு போன் செய்து ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்று புரளியை கிளம்பி இருந்தார்.

    அப்போது இது குறித்து அவரிடம் கேட்டபோது வீட்டில் சாப்பாடு சரியில்லை. ஜெயில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதால் இவ்வாறு போன் செய்து செய்து மிரட்டல் விடுத்ததாக கூலாக பதில் சொன்னார்.

    இந்நிலையில் 3-வது முறையாக மிரட்டல் விடுத்து கைதாகி உள்ளார். இந்த முறை மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது,

    சும்மா பொழுது போக்குக்காக போன் செய்து மிரட்டியதாக மீண்டும் கூலாக கூறினார். இதனைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து டவுன் போலீசார் அசோக்குமார் மீது 506 (1), கொலை மிரட்டல் விடுப்பது, 507 பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செய ல்பட்டது என 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பின்னர் சந்தோஷ் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×