search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரமடை அருகே சிறுத்தையை கண்காணிக்க 6 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தம்
    X

    காரமடை அருகே சிறுத்தையை கண்காணிக்க 6 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தம்

    • மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பசுமாடு ஒன்றினை சிறுத்தை தாக்கி இழுத்துச்சென்றுள்ளது.
    • கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வனத்துறையினர் நடவடிக்கை

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானை,காட்டு மாடு, மான்,சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவுக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

    காரமடையை அடுத்துள்ள முத்துக்கல்லூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(45). விவசாயியான இவர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பசு மாடுகளை வளர்த்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை தான் வளர்த்து வரும் மாடுகளை முத்துக்கல்லூர் பகுதியை ஒட்டியுள்ள தோகை மலை அடிவாரப்பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச்சென்றுள்ளார்.

    அப்போது,அங்கு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பசுமாடு ஒன்றினை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து பதுங்கி இருந்த சிறுத்தை தாக்கி இழுத்துச்சென்றுள்ளது. மாட்டின் அலறல் சத்தம் கேட்ட கோவிந்தராஜ் மாட்டினை சிறுத்தை தூக்கி சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதனையடுத்து அவர் காரமடை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.விரைந்து வந்த வனத்துறையினர் உதவியுடன் அங்கு சென்று பார்த்த போது அங்குள்ள புதர் பகுதியில் பசுமாடு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

    இதனையடுத்து உயிரிழந்த பசுமாட்டினை வனத்துறையினர் ஆய்வு செய்தபோது சிறுத்தை தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்,காலடித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டும் அது சிறுத்தைதான் என வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காரமடை வனச்சரகர் திவ்யா கூறுகையில் முத்துக்கல்லூர் பகுதியில் பசு மாட்டினை அடித்துக்கொன்றது குறித்து காலடித்தடங்கள் மற்றும் நகக்கீறல்கள் உள்ளிட்டவற்றை வைத்து அது சிறுத்தை தான் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.

    கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பெயரில் விவசாயி கோவிந்தராஜின் பட்டா நிலம்,இரவு நேரங்களில் மாடுகளை அடைக்கும் பட்டி சாலை, வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறும் இடம் என 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், நடமாட்டம் தெரிய வந்தவுடன் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் கூண்டு வைத்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×