search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் பயணி தவறவிட்ட 90 கிராம் தங்க நகைகள் மீட்டு ஒப்படைப்பு
    X

    நகைகளை பத்திரமாக மீட்டு தினேஷ்குமாரிடம் ஒப்படைத்த தஞ்சை ரெயில்வே போலீசார்.

    ரெயிலில் பயணி தவறவிட்ட 90 கிராம் தங்க நகைகள் மீட்டு ஒப்படைப்பு

    • ஆர்டரின் பேரில் 90 கிராம் தங்க ஆரம் உள்ளிட்ட ஆபரணங்களை செய்தார்.
    • ஆலக்குடி ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தஞ்சாவூா்:

    திருவாரூர் கம்பர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் தினேஷ்குமார் (வயது 36). இவர் திருவாரூரில் நகை பட்டறை வைத்துள்ளார்.

    ஆர்டரின் பெயரில் நகை செய்து கொடுப்பார்.

    அதன்படி காரைக்குடியில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஆர்டரின் பேரில் 90 கிராம் தங்க ஆரம் உள்ளிட்ட ஆபரணங்களை செய்தார்.

    பின்னர் காரைக்குடிக்கு நேரடியாக சென்று அந்த வாடிக்கையாளரிடம் கொடுப்பதற்காக ஒரு பேக்கில் 90 கிராம் தங்க நகைகளை வைத்து கொண்டு திருவாரூரில் இருந்து காரைக்குடி- திருச்சி பயணிகள் ரயிலில் ஏறினார்.

    பின்னர் தஞ்சை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ் மூலம் காரைக்குடிக்கு செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தான் கொண்டு வந்த பேக் நகைகளோடு மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தும் பலன் இல்லை. அப்போதுதான் வந்த ரயிலில் பேக்கை மறந்து வைத்தது தெரிய வந்தது.

    உடனடியாக தஞ்சை ரயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்திற்கு வந்து நடந்த விவரங்களை கூறி நகைகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் அறிவுறுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவுப்படி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குமார், பாதுகாப்பு படை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார், இருப்பு பாதை தனிப்பிரிவு சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ், தலைமை காவலர் லதா, பாதுகாப்பு படை ஏட்டு மணிகண்டன் மற்றும் போலீசார் ரயில் செல்லும் வழியான ஆலக்குடிக்கு விரைந்து சென்றனர். முன்னதாக ஆலக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் நரேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் ஊழியர் ரத்தினத்திடம் நடந்த விவரங்களை கூறினார்.

    அப்போது ஆலக்குடியில் ரயில் வந்து நின்றது. உடனே அனைத்து பெட்டிகளிலும் ஏறி சோதனை செய்து பேக்கை கண்டுபிடித்தனர். அதைத் திறந்து பார்த்தபோது 90 கிராம் நகைகள் பத்திரமாக இருந்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த நகைகளை தஞ்சாவூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் தஞ்சையில் தினேஷ் குமாரிடம் 90 கிராம் தங்க நகைகளை போலீசார் ஒப்படைத்தனர். அதிவிரைவாக நகைகளை மீட்ட ரெயில்வே போலீசாருக்கு தினேஷ்குமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    Next Story
    ×