search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தாமதமாக வரும் டாக்டர்களை கண்டித்து பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
    X

    டாக்டர்கள் தாமதமாக வந்ததை கண்டித்து போராட்டம் நடத்திய காட்சி.

    மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தாமதமாக வரும் டாக்டர்களை கண்டித்து பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

    • பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் என இங்கு அதிகளவில் வந்து செல்வர்.
    • ஊழியர்கள் யாரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை மற்று அதன் சுற்று வட்டார கிராமத்தில் இருந்து, தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்டோர், மங்கலம்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்கள், வயதான முதியோர், அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் என இங்கு அதிகளவில் வந்து செல்வர்.

    இந்த மருத்துவமனையில் 5 டாக்டர்கள், ஒரு சித்த மருத்துவர், ஒரு பல்நோக்கு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணி புரிகின்றனர். காலை 7.30 மணிக்கு வரவேண்டிய மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை. இதனால், தினந்தோறும் இங்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் மருத்துவ சீட்டு வாங்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலையில் உள்ளது. இதனால், இன்று காலை சிகிச்சை பெறுவதற்காக வந்த பொதுமக்கள் இந்திய குடியரசு கட்சியின் மாநில முன்னாள் இணைப் பொதுச் செயலாளர் மங்காபிள்ளை தலைமையில் திடீரென மருத்துவமனை முன்பு, கையில் மருத்துவ சீட்டுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இக்பால், விடுதலை சிறுத்தைகள் கட்ளி ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, ராம்குமார், இந்திய குடியரசு கட்சி மாவட்ட பொருளாளர் கணேசன், நகர தலைவர் கதிர்காமன், அலிபாபு உட்பட சிகிச்சை பெறுவதற்காக வந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×