என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கோவையில் பெட்ரோல் வெடிகுண்டுகளுடன் சிக்கிய வாலிபர் கைது கோவையில் பெட்ரோல் வெடிகுண்டுகளுடன் சிக்கிய வாலிபர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2025/02/12/9224250-newproject17.webp)
கோவையில் பெட்ரோல் வெடிகுண்டுகளுடன் சிக்கிய வாலிபர் கைது
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- பெட்ரோல் வெடிகுண்டுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல்
- கைது செய்யப்பட்டவர் மீது 5 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை:
கோவை செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்கா ரர்களாக பணியாற்றி வரும் செல்வகுமார் மற்றும் பிரசாந்த் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். போலீசார் நிற்பதை பார்த்ததும், வாலிபர் அங்கிருந்து வாகனத்தை திருப்பி செல்ல முயன்றார்.
இதை பார்த்ததும் போலீஸ்காரர்கள் 2 பேரும் ஓடி சென்று, அந்த வாலிபரை மடக்கிபிடித்தனர். பின்னர் இந்த நேரத்தில் எங்கு செல்கிறீர்கள். எங்களை பார்த்ததும் ஏன் வாகனத்தை திருப்பினீர்கள் என கேட்டு விசாரித்தனர். அவர் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார்.
இதையடுத்து போலீஸ்காரர்கள், அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.
அப்போது அதில், 2 பெட்ரோல் வெடிகுண்டுகள் இருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான போலீசார், அந்த வாலிபரிடம் இது தொடர்பாக விசாரித்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தார்.
இதையடுத்து போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் சுந்தராபுரம் அடுத்த மைல்கல் பகுதியை சேர்ந்த நாசர் என்பது தெரியவந்தது.
இவர் தெலுங்கு பாளையம் பிரிவு ரோட்டில், அலுவலகம் நடத்தி வரும் பா.ஜ.க பிரமுகரான மணிகண்டன் என்பவரிடம் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மணிகண்டனிடம், நாசர் கடனாக ரூ.5 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மணிகண்டன் பணம் கொடுக்க மறுத்து விட்டார் என கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டன் மீது ஆத்திரம் அடைந்த அவர், அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
நேற்றிரவு, கரும்புக்கடை ஆசாத் நகரில் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து நாசர் மது அருந்தியதும், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர், மணிகண்டனை பழிவாங்க அவரது அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு, பெட்ரோல் வெடிகுண்டுகளுடன் வந்தபோது போலீஸ் சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து பெட்ரோல் வெடிகுண்டுகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கைதான நாசர் மீது, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, கரும்புக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வழக்கு, விஸ்வரூபம் படம் வெளியான போது குனியமுத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கு உள்பட 5 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.