search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவர்சோலை அருகே கண்காணிப்பு காமிராவில் சிக்காமல் போக்கு காட்டும் புலி
    X

    தேவர்சோலை அருகே கண்காணிப்பு காமிராவில் சிக்காமல் போக்கு காட்டும் புலி

    • கால்நடைகளை அடித்து கொல்லும் புலி கண்காணிப்பு காமிராவில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.
    • வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கூடலூர்

    கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன்-1 பகுதியில் கடந்த சில வாரங்களாக புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் கூண்டு வைத்து புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின்பேரில் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் தேவன்-1 பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 14 இடங்களில் கேமராக்களை பொருத்தினர். அந்த கேமராக்களை தினமும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆனால் இதுவரை புலி நடமாட்டம் கேமராக்களில் பதிவாகவில்லை. அது கேமராக்களில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது. இருப்பினும் வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து வனச்சரகர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, தேவன்-1 பகுதியில் 14 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வரும் விலங்கு புலியா அல்லது சிறுத்தையா என அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கேமராக்களில் எந்த வனவிலங்குகளின் நடமாட்டமும் பதிவாகவில்லை. இருப்பினும் அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×