என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மு.க. ஸ்டாலின் பொய் சொல்கிறார்: சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மைதான்- எடப்பாடி பழனிசாமி மு.க. ஸ்டாலின் பொய் சொல்கிறார்: சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மைதான்- எடப்பாடி பழனிசாமி](https://media.maalaimalar.com/h-upload/2023/08/13/1931584-edappadipalanisamy.webp)
மு.க. ஸ்டாலின் பொய் சொல்கிறார்: சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மைதான்- எடப்பாடி பழனிசாமி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 1989-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்ததை நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்
- ஒத்திகை பார்த்து ஜெயலலிதா நடத்திய நாடகம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் தெரிவித்திருந்தார்
மக்களவையில் மணிப்பூர் சம்பவத்தையோட்டி பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி துரியோதனன் சபையில் திரவுபதியின் துயில் உரித்தது போன்று நடக்கிறது என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் அவமானப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சி தி.மு.க. என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளிக்கின்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட நாடகம் என்று பொய் சொல்கிறார். இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்தார் போல் தெரிகிறது. நான் அந்த சம்பவம் நடக்கும்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். நானும் அந்த அவையிலே இருந்து அதை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி முன்னிலையில் பெண் என்றும் பாராமல், ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமல் ஒரு கொடூர தாக்குதல் நடந்தது.
திட்டமிட்டே அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி முன்பே தி.மு.க. எல்.எல்.ஏ.க்கள் அம்மாவை கடுமையாக தாக்கினார்கள். அப்போது திருநாவுக்கரசும் அதனை தடுத்தார். அப்போது, தற்போதைய மூத்த அமைச்சர் சேலையை பிடித்தும், தலைமுடியை பிடித்து இழுத்தும் ஒரு கோர தாக்குதலை நிகழ்த்தினார்கள்.
இதுபோன்ற சம்பவம் எந்த மாநிலத்திலும், எந்த ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினருக்கும், எந்த எதிர்க்கட்சி தலைவருக்கும் நடந்தது கிடையாது. இன்னும் அந்த சம்பவம் எங்கள் நெஞ்சில் இருந்து நீங்காமல் இருக்கிறது. அந்த சம்பவம் நடைபெற்ற தினத்தை கருப்பு தினமாகவே நான் கருதுகிறேன். நான் மீண்டும் சட்டமன்றத்தில் நுழைகின்ற பொழுது தமிழக முதல்-அமைச்சராக நிச்சயம் சட்டமன்றத்துக்கு நுழைவேன் என்று சபதம் ஏற்று அம்மா வெளியில் சென்றார்.
அதன்படி 1991 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் நானும் வெற்றி பெற்றேன். அதன் மூலமாக உண்மை வென்றது, தர்மம் வென்றது, நியாயம் வென்றது. இன்றைய தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறான தகவலை, பொய்யான தகவலை வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்தி வெளியிட்டு தான் ஒரு பொம்மை முதல்வர் என்பதை நிரூபித்துள்ளார்.
இது கடும் கண்டனத்திற்குரியது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். இன்றைக்கு எவ்வளவு பாலியல் வன்கொடுமைக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு பெண் மீது ஒரு நாட்டினுடைய முதலமைச்சர் கண்ணெதிரே சட்டத்தை பாதுகாக்க கூடிய ஒரு அரசாங்கம் பெண் என்று பாராமல் எதிர்க்கட்சித் தலைவர் என்று பாராமல் அவருடைய சேலையை பிடித்து இழுத்த போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.
அவர்களை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். இப்படி ஒரு நிகழ்வு தாக்குதல் நடத்தியவர்களின் தங்கைக்கோ, சகோதரிக்கோ, தன் மகளுக்கோ ஏற்பட்டிருந்தால் எப்படி மனம் வேதனைப்பட்டு இருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு ரத்து என்று சொல்லிய முதல்வர் இதுவரை ஏன் செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை? எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இதற்காக குரல் கொடுத்திருக்க வேண்டியதுதானே.
நாங்கள் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் கூட்டணி கட்சியாக இருந்த போதிலும் பாராளுமன்றத்தை 22 நாள் தொடர் போராட்டம் மூலம் முடக்கினோம். அந்த தில் தி.மு.க.வுக்கு இல்லை. இதெல்லாம் ஒரு பொய்யான தேர்தல் வாக்குறுதி. சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம். எல்லா மாநிலத்திலும் நீட் தேர்வு நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழகத்தில் ரத்து செய்வோம் என்று கூறுவது வேடிக்கையான ஒன்று.
தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். இந்த கூட்டம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சென்ற முதல்வர் இந்த கூட்டணியில் இணைவது என்றால் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்திருக்க வேண்டியது தானே. அப்படி வைத்திருந்தால் இப்போது காவிரியில் தண்ணீர் வந்திருக்கும். விவசாயிகளின் கவலை தீர்ந்திருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே ஜாதி சண்டை, மத சண்டை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.