search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகர்-போலீசார் விசாரணை
    X

    அ.தி.மு.க. பிரமுகர் பொன்ஆனந்த்-சாந்தி

    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகர்-போலீசார் விசாரணை

    • பணத்தை வாங்கிய பின் ஒரு வாரம் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை.
    • பொன்ஆனந்த், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மிரட்டல் விடுத்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் ஜெயமாலா (வயது 48). இவர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து செல்வகுமார் என்பவரை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஜெயமாலா ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த வாரம் கலங்காபுதூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றேன். பின்னர் அங்கிருந்து வீடு திரும்புவதற்காக பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தேன்.

    அப்போது கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்த பொன்ஆனந்த் (வயது 50), அவரது மனைவி சாந்தி ஆகியோர் காரில் அங்கு வந்தனர். இருவரும் ஊருக்கு செல்ல அரசு பஸ் வர தாமதம் ஆகும். எனவே காரில் ஏறி கொள்ளுங்கள் வீட்டில் இறக்கி விடுகிறோம் என கூறினர்.

    இதனை நம்பி நான் அவர்களுடன் சென்றேன். ஆனால் என்னை வீட்டில் இறக்கி விடாமல் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு பொன் ஆனந்த் ரூ.2½ லட்சம் கொடுத்தால் உனக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என ஆசைவார்த்தை கூறினார்.

    மறுநாள் தென்காசி ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கு என்னை அழைத்து சென்ற பொன் ஆனந்த் எனது தாலி உள்பட 6 பவுன் நகையை அவரது பெயரில் அடகு வைத்து ரூ.2 லட்சம் கடன்பெற்றார்.

    மேலும் எனது ஏ.டி.எம். கார்டு மூலம் வங்கி கணக்கில் இருந்த ரூ.55 ஆயிரத்தை எடுத்தார். பணத்தை வாங்கிய பின் ஒரு வாரம் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, பொன்ஆனந்த், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மிரட்டல் விடுத்தனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி வருகிறார். மாவட்ட குற்ற பிரிவிலும் இதுதொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.

    பொன் ஆனந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னம்மா பேரவையில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததாக கூறப்படுகிறது.

    Next Story
    ×