search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பூைஜ பொருட்கள் வாங்க அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்
    X

    சேலம் கடை வீதியில் துளசி மணி மாலைகளை தேர்வு செய்யும் பக்தர்கள்.

    கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பூைஜ பொருட்கள் வாங்க அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்

    • சேலத்தில் கார்த்திகை மாதம் நாளை ெதாடங்குவதால் சபரிமலை யாத்திரைக்குரிய பொருட்கள், விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • ஒரு மண்டலம் (48 நாள்) விரதம் இருந்து, சபரிமலைக்கு சென்று மகரஜோதி தரிசனம் செய்த பின், விரதத்தை முடிக்கின்றனர்.

    சேலம்:

    கார்த்திகை மாதம் நாளை ெதாடங்குவதால் சேலம் மாநகரில் உள்ள கடைகளில், சபரிமலை யாத்திரைக்குரிய பொருட்கள், விரதத்துக்கு தேவையான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கார்த்திகையில் தொடங்கி தை மாதம் வரை, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள், துளசிமணி மாலை அணிந்து, சபரிமலைக்கு யாத்திரை செல்கின்றனர். கார்த்திகை மாதம் மாலை அணியும் பக்தர்கள், ஒரு மண்டலம் (48 நாள்) விரதம் இருந்து, சபரிமலைக்கு சென்று மகரஜோதி தரிசனம் செய்த பின், விரதத்தை முடிக்கின்றனர்.

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக, ஐப்பசி மாதத்தின் கடைசி வாரத்திலேயே காவி வேஷ்டிகள், துண்டுகள், துளசிமணி மாலைகள், பூஜை பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டது. வழக்கமான பூஜை பொருள் விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. சபரிமலை யாத்திரைக்கு மாலை அணியும் பக்தர்களுக்காக, சேலம் கந்தாஸ்ரமம், பெங்களூரு பைபாஸ் அய்யப்பா ஆஸ்ரமம் ஆகிய இடங்களிலும் மாலை அணிவதற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    காவி வேஷ்டி, துண்டு, சட்டை அடங்கிய செட் (ஒன்று), ரூ.350 முதல் 650 வரையிலும், வேஷ்டி மட்டும் ரூ. 150 முதல் 285 வரையிலும், துண்டு மட்டும் ரூ. 60 முதல், 125 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இருமுடி பை, ரூ. 100 முதல் 175 வரையிலும், பூஜை பொருட்கள் அடங்கிய பாக்கெட் ரூ. 100 முதல் 120 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய், பழம் போன்றவையும் விற்பனை செய்யப்படுகிறது.

    பூஜை பொருட்கள் விற்பனை செய்யும், சேலம் சின்னக்கடை வீதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    சபரிமலைக்கு வழக்கமாக செல்லும் பக்தர்களுக்கு மட்டுமின்றி, புதிதாக மாலை அணியும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்கிறோம். கோவில் நிர்வாகங்களும், பூஜை பொருட்களை மொத்தமாக வாங்கிச் சென்று, பக்தர்களுக்கு வழங்கி வருகின்றன. துளசி, படிகம், வெட்டிவேர் என தனித்தனியாகவும், கலந்தும் தயாரித்த மாலைகளையும் விற்பனைக்கு வைத்துள்ளோம். இருமுடி கட்டும் பைகள், போர்வை, இருமுடி கட்ட தேவையான பூஜை பொருட்கள் அடங்கிய பாக்கெட் ஆகியவற்றையும் விற்பனை செய்கிறோம். நெய் உட்பட அனைத்து பொருட்களையும், தரமானதாகவும், வழங்கி இறை பணியில் எங்களையும் இணைத்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×