search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    கோத்தகிரியில் ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • அருட்தந்தை ஜெயகுமார் தலைமையில் மாலை 6.15 மணிக்கு திருத்தேர்பவனி
    • தேவாலய வளாகம் வண்ண -வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது

    அரவேணு,

    கோத்தகிரியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.

    கோத்தகிரி ஆலய பங்கு தந்தை அமிர்தராஜ், எம ரால்டு ஆலய பங்குத்தந்தை ஞானதாஸ் ஆகியோர் தலைமையேற்று கொடியேற்றத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் மாலை 5.30 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் திருப்பலிகள் நடக்க உள்ளது.

    திருவிழாவின் முக்கிய நாளான 11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ், ஆங்கிலத்தில் திருப்பலியும், 8 மணிக்கு கூட்டுபாடல் திருப்பலியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அருட்தந்தை ஜெயகுமார் தலைமையில் மாலை 6.15 மணிக்கு திருத்தேர்பவனி நடக்க உள்ளது.

    அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன்னை வீற்றிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.

    தொடர்ந்து ஆலயத்தில் தேவ நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தேவாலய வளாகம் வண்ண -வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது.

    Next Story
    ×