என் மலர்
உள்ளூர் செய்திகள்
கொட்டும் உறைபனி: நீலகிரியில் தேயிலை அறுவடை பணி தீவிரம்
- நீலகிரி மாவட்டத்தில் தற்போது நீர் பனிப்பொழிவு மற்றும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
- உறைபனியின் தாக்கத்தால் தேயிலை மகசூல் குறைவதுடன், விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டமும் ஏற்படும்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தேயிலை விவசாயத்தில் 63 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.
மாவட்டத்தில் 16 அரசு கூட்டுறவு தொழிற்சாலைகளும், 110 தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது நீர் பனிப்பொழிவு மற்றும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்த பாதிப்புகளில் இருந்து, தேயிலை செடிகளை பாதுகாக்க தேயிலை எஸ்டேட் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி, அதனை பாதுகாத்து வருகின்றனர்.
ஆனால் சிறு விவசாயிகள் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் முன்னெச்சிக்கை நடவடிக்கையாக தேயிலை அறுவடை செய்கின்றனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு,குறு விவசாயிகள் தாழ்வான பகுதிகளில் பயிரிட்டுள்ள தேயிலையை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் உறைபனி அதிகளவில் விழத் தொடங்கி விடும். அவ்வாறு விழுந்தால் தேயிலை செடிகள் பாதிக்கப்படும். குறிப்பாக தாழ்வான பகுதியில் உள்ள செடிகள் தான் அதிக பாதிப்புக்குள்ளாகும். எனவே முன்கூட்டியே தேயிலை செடிகளில் உள்ள இலைகளை நாங்கள் அறுவடை செய்து வருகிறோம்.
அறுவடைக்கு பின்னர் உடனடியாக செடிகளை கவாத்து செய்து முறையாக பராமரித்தால் மட்டுமே அடுத்த 3 மாதத்துக்கு பின்னர் மகசூல் கிடைக்கும். அதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்கி உள்ளோம்.
உறைபனியின் தாக்கத்தால் தேயிலை மகசூல் குறைவதுடன், விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டமும் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.