என் மலர்
உள்ளூர் செய்திகள்
அண்ணன் வந்துட்டேன்,கவலை படாதே...நெல்லிக்குப்பம் பகுதியில் அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு
- பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை.
நெல்லிக்குப்பம்:
கடலுர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் பெரும் பாதிப்பை சந்தித்தது.
இந்த நிலையில் தொழிலாளர் நல த்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முள்ளி கிராம்பட்டில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அந்த வகையில் கையில் குழந்தையுடன் நின்ற இளம்பெண் மற்றும் மூதாட்டி ஒருவரிடம் அமைச்சர் சி.வெ.கணேசன் குறைகளை கேட்டார்.
அப்போது அவா்கள் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி கதறி அழுதனர்.
இதை பார்த்த அமைச்சர் சி.வெ.கணேசன், உடனே அந்த பெண்களின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறி, அண்ணன் வந்துட்டேன், கவலை படாதே, உங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.
மேலும் இளம்பெண் வைத்திருந்த பெண் குழந்தையை வாங்கிய அமைச்சர், அந்த குழந்தைக்கு மணிமேகலை என்று பெயர் சூட்டினார்.
பின்னர், தாசில்தாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் வருகிறேன் என்று தெரிந்தும் நீங்கள் வரவில்லை, உடனே இங்கு வந்து பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறி எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், கமிஷனர் கிருஷ்ணராஜன், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மாருதி ராதாகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், வி.சி.க. நகர செயலாளர் திருமாறன் மற்றும் பலர் உடனிருந்தனர்.