search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி நாளை முதல் பஸ்கள் இயக்கம்- முதற்கட்டமாக டவுன் பஸ்கள் மட்டும் செல்கிறது
    X

    சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலை விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி நாளை முதல் பஸ்கள் இயக்கம்- முதற்கட்டமாக டவுன் பஸ்கள் மட்டும் செல்கிறது

    • நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இடித்து புதிதாக கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.
    • பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் இருந்து சில டவுன் பஸ்களை இயக்கபட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முழுமையாக இடித்துவிட்டு ரூ. 79 கோடியில் புதிதாக கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    கட்டுமான பணிகள்

    பல்வேறு பிரச்சினைகளை கடந்து அங்கு கட்டுமான பணிகள் பெருமளவில் முடிவுற்ற நிலையில், கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக பஸ் நிலையம் திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக சுமார் 6 ஆண்டுகளாக சந்திப்பு பகுதியில் பஸ்களை உள்ளே இயக்க முடியாத நிலை இருந்தது.

    மாற்று ஏற்பாடாக தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்ததால் சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.

    கமிஷனர் ஆய்வு

    இதனால் அப்பகுதி வியாபாரிகள் தச்சை மண்டல முன்னாள் சேர்மனும், கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன் தலைமையில் மாநகராட்சியை முற்றுகையிட்டு மனு அளித்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், பஸ் நிலையத்தை திறக்க கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நாளை முதல்....

    இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி சந்திப்பு பஸ்நிலையத்தின் வெளிப்பகுதியில் இருந்து சில வழித்தடங்களுக்கு டவுன் பஸ்களை இயக்கபட உள்ளது. இதற்காக ராஜா பில்டிங் சாலையில் கட்டுமான பணிக்காக சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தகர சீட்டுகள் அகற்றப்பட்டு, சற்று உள்ளே தள்ளி அமைக்கப்பட்டது.

    இந்த பகுதியில் பஸ்கள் வந்து செல்வதற்கு வசதியாக பொக்லைன் உதவியுடன் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் நாளை முதல் இங்கிருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தொடர்ந்து அடுத்த வாரத்தில் தென்காசி, கடையம், பாபநாசம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையத்திற்குள் செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×