search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு: புளிய மரத்திலிருந்து குடம் குடமாக கொட்டிய தண்ணீர்- ஆச்சரியப்பட்ட மக்கள்
    X

    காவிரி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு: புளிய மரத்திலிருந்து குடம் குடமாக கொட்டிய தண்ணீர்- ஆச்சரியப்பட்ட மக்கள்

    • மரத்திலிருந்து எப்படி தண்ணீர் வரும்? என்ற பிரமிப்போடு அக்கம்பக்கத்து தெருவைச் சேர்ந்தவர்களும் பார்த்து சென்றனர்.
    • மரத்திலிருந்து ஒரு மணி நேரம் முதல் சுமார் 3 மணி நேரம் வரை தண்ணீர் பீய்ச்சி அடித்தது.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிகொண்டா சாலையில் உள்ள வேப்பூரில் புளிய மரத்திலிருந்து திடீரென தண்ணீர் வரத் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியோடு பார்வையிட்டு சென்றனர்.

    குடியாத்தம் பள்ளிகொண்டா சாலையில் உள்ள வேப்பூர் கிராமத்தில் புளிய மரம் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மரத்தில் திடீரென்று தண்ணீர் வர தொடங்கியது. இதனைக் கண்டு இந்த பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அருகாமையில் இருந்த அக்கம்பக்கத்தினர் அந்த தண்ணீரை குடங்களில் பிடித்து மகிழ்ந்தனர்.

    அதேபோல மரத்திலிருந்து எப்படி தண்ணீர் வரும்? என்ற பிரமிப்போடு அக்கம்பக்கத்து தெருவைச் சேர்ந்தவர்களும் பார்த்து சென்றனர்.

    சிறிது நேரம் கழித்து தண்ணீர் தானாகவே நின்று போனது. இது ஒரு அதிசய நிகழ்வாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த மரத்திலிருந்து தண்ணீர் வரும் வீடியோ வைரலானது.

    மரத்திலிருந்து ஒரு மணி நேரம் முதல் சுமார் 3 மணி நேரம் வரை தண்ணீர் பீய்ச்சி அடித்தது.

    இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், மழையின் காரணமாக மரத்தில் வெற்றிடத்தில் நீர் தேங்கி இருக்கும்.அந்த நீர் கூட வெளியேறியிருக்கலாம் என்றனர்.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். மரத்தின் கீழே செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அதிக அழுத்தத்தில் தண்ணீர் வெளியேறி மரத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தனர்.

    குழாயில் தண்ணீர் வரும் போதெல்லாம் புளிய மரத்திலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வருகிறது.

    இதனை அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஓட்டிகள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். மேலும் பலர் அதன் அருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×