search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெரிஞ்சிபேட்டை, பூலாம்பட்டி இடையே படகு போக்குவரத்து நிறுத்தம்
    X

    நெரிஞ்சிபேட்டை, பூலாம்பட்டி இடையே படகு போக்குவரத்து நிறுத்தம்

    • மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள், தொழிலாளர்கள் மாணவ-மாணவிகள் சுமார் 15 கிலோ தூரம் சுற்றி சாலை மார்க்கமாக பஸ்களில் சென்று வருகிறார்கள்.

    அம்மாபேட்டை:

    கர்நாடகா மாநிலம் மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டியது. இதனால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, கருங்கல்பாளையம், கொடிமுடி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிபேட்டை - பூலாம்பட்டிக்கு காவடிரி ஆற்றில் படகு போக்குவரத்து இருந்து வருகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் படகு போக்குவரத்து நிறத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதையடுத்து நெரிஞ்சிபேட்டை - பூலாம்பட்டிக்கு மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கி நடந்து வந்தது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது அணையில் இருந்து காவிரி ஆற்றில் 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி நெரிஞ்சிபேட்டை - பூலாம் பட்டிக்கு செல்லும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு மீண்டும் நிறுத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து படகுகள் நெரிஞ்சிபேட்டை காவிரி கரையோரங்களில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    காவிரி ஆற்றில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து நிறுத்தபட்டு உள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தால் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் அம்மா பேட்டை, நெரிஞ்சிபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள், தொழிலாளர்கள் மாணவ-மாணவிகள் சுமார் 15 கிலோ தூரம் சுற்றி சாலை மார்க்கமாக பஸ்களில் சென்று வருகிறார்கள்.

    Next Story
    ×