search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாம் தமிழர் கட்சியினர்-தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இடையே மோதல்- போலீசார் குவிப்பு
    X

    நாம் தமிழர் கட்சியினர்-தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இடையே மோதல்- போலீசார் குவிப்பு

    • இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    • நாம் தமிழர் கட்சியினர் பெரியாரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி பேரணி.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி கட்சியினருடன் இன்று மதியம் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள பழமையான சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ தேவாலயம் முன்பாக பிரார்த்தனை நடத்தி விட்டு வெளியே வரும் கிறிஸ்துவ மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அதே பகுதியில் பெரியார் பற்றி அவதூறாக பேசிய சீமானை கண்டிக்கும் விதமாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமான் புகைப்படத்தை ஒருபுறம் நாம் தமிழர் கட்சி போலவும், மறுபுறம் பா.ஜ.க.வின் காவி உடை அணிந்தப்படி இருப்பது போல கார்டூன் புகைப்படத்தை போட்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    இதனால் நாம் தமிழர் கட்சியினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

    சீமானுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கி வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை நாம் தமிழர் கட்சியினர் சென்று தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அங்கிருந்த போலீசார் 2 தரப்பினரையும் அப்பகுதியை விட்டு வெளியே செல்லக்கூறியதை தொடர்ந்து மீண்டும் தேவாலயம் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் பிரார்த்தனை முடித்து வெளியே வரும் கிறிஸ்தவர்களிடம் பிரசாரம் மேற்கொண்டனர்.

    தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் பெரியாரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி சாலையில் பேரணியாகச் சென்றனர். மேலும் இந்த மோதல் சம்பவத்தின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பன்னீர்செல்வம் பூங்காவில் குவிக்கப்பட்டு ள்ளனர்.

    இதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியினரை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரகுருபன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாம் தமிழர் கட்சியினர் மீது பதில் தாக்குதல் செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    நாளை மாலை பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில் தற்போது இந்த சம்பவம் கிழக்கு தொகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×