என் மலர்
உள்ளூர் செய்திகள்
கொன்றைக்காடு அரசு பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் விழா- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- கன்றுகள் நட்டு மரமாகும் வரை பராமரிக்க வேண்டும்.
- மரக்கன்றுகள் நட்டு சிறந்த முறையில் பராமரித்து வரும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் வீட்டுக்கு ஒரு விருட்சம் மரக்கன்றுகள் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி, பேராவூரணி லயன்ஸ் சங்க தலைவர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கலந்துரையாடினார். கன்றுகள் நட்டு மரமாகும் வரை பராமரிக்க வேண்டும். இதன் மூலம் பசுமை புரட்சி ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.
மரக்கன்றுகள் நட்டு சிறந்த முறையில் பராமரித்து வரும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, 2-ம் பரிசாக 2 பேருக்கு ரூ.2000 3-ம் பரிசாக 3 பேருக்கு ரூ.1000 என மொத்தம் 6 பேருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தலைமை ஆசிரியர் அறிவித்தார்.
நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் ராதிகாமைக்கேல், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ பிரபாகரன், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல்வேந்திரன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பசுமை பூமி வேளாண்மை சமூக நல அறக்கட்டளை சார்பில் 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கிராமத்தில் தாய் தந்தையரை இழந்து, மூளை நரம்பியலால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சகோதரியுடன் வசித்து வந்த பாண்டிமீனா என்ற ஏழை மாணவிக்கு சாலை வசதியுடன் கூடிய கான்கிரீட் வீடு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் சொந்த நிதி, தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.6 லட்சம் செலவில் கட்டி கொடுத்து திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி கண்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.