search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி அலுவலர்கள் தர்ணா
    X

    தஞ்சையில் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்.

    மாநகராட்சி அலுவலர்கள் தர்ணா

    • டி பிரிவு ஊழியர்களுக்கான பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.
    • மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு பெறும் வகையில் புதிய அரசாணை வெளியிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, மாநகராட்சி அனைத்துபிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கங்கள் ஆகியவை சார்பில் தஞ்சை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தர்ணாபோராட்டம் நடந்தது. இதற்கு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் மதிவாணன், வருவாய் உதவியாளர் சங்க மாநில தலைவர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் சங்க நிர்வாகி செல்வமணி, துப்புரவுபணி மேற்பார்வையாளர் சங்க நிர்வாகி கலியபெருமாள், மருந்தாளுனர் சங்க நிர்வாகி இளந்தமிழன், துப்புரவு பணியாளர் சங்க மநில தலைவர் ராமன், அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ஜெய்ராஜ் ஆகியோர் பேசினர்.

    போராட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண்: 152-ன்படி இளநிலை உதவியாளர், உதவியாளர், பதிவறை எழுத்தர்கள், ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் அவுட் "சோர்சிங் மூலம் இனி வரும் காலங்களில் நியமனம் செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.

    இந்த அரசாணை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலனை செய்து டி பிரிவு ஊழியர்களுக்கான பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.

    ஏற்கனவே பணிபுரியும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு பெறும் வகையில் புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி நிறைவு செய்து பேசினார். முடிவில் நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க நிர்வாகி மூர்த்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×