search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால்  மலைபோல் தேங்கிக் கிடக்கும் கோப்புகள் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
    X

    நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் மலைபோல் தேங்கிக் கிடக்கும் கோப்புகள் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

    • குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • நாகர்கோவில் மாநகரப்பகுதியில் ரோடுகளில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றுகிறார்கள்.

    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்சிலதா, என்ஜினீயர் பால சுப்பிரமணியன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், மண்டல தலைவர்கள் முத்துராமன், ஜவகர், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சி லர்கள் நவீன் குமார், ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், அய்யப்பன், டி.ஆர்.செல்வம், அனிலா சுகுமாரன், ரோசிட்டா, வளர்மதி, ரமேஷ், வீரசூரபெருமாள், மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் முன்னாள் நகராட்சி தலைவர் ஜெமீலா ஜேம்ஸ் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப்பகுதியில் ரோடுகளில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றுகிறார்கள். மணல்களை அகற்றவில்லை. பெயர் மாற்றம், வரிவிதிப்பு தொடர்பாக மனுக்கள் அளித்து ஏராளமான புகார் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. வருவாய்துறை பிரிவில் பல்வேறு ஊழியர்கள் பணிக்கு வராத நிலை உள்ளது. இதனால் ஊழியர்களின் மேஜைகளில் கோப்புகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநக ராட்சியில் உள்ள மண்டல அலுவலகத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 17 மாதம் ஆகியும் மண்டல அலுவலகம் திறக்கப்படாததால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவில் உள்ள கழிவறைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. குடும்பத்தோடு சென்றால் மூக்கை பிடித்து விட்டு கழிவறைக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே அதை சரி செய்ய வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல சூரங்குடி பகுதியில் பாசன கால்வாயில் வீட்டு கழிவுகள் விடப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முக்கடல்அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்திராயன் 3 வெற்றி பெற்றதற்கு மாநகராட்சி கூட்டத்தில் நன்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படும் என்று கூறி பல மாதங்கள் ஆகியும் ரவுண்டானா அமைக்கப்பட வில்லை. ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் பேசியதாவது:- சாலையில் உள்ள குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்களும். தனியார் மூலம் நியமிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களும் அகற்றி வருகிறார்கள். ஆனால் மணல்களை. மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து மட்டுமே அகற்ற முடியும். இதுதொடர்பாக தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.

    நாய் தொல்லையை கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருத்தடைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கருத்தடை செய்யப்பட்ட நாய்களை ஒரே இடத்தில் வைப்பதற்கு போதுமான இட வசதி தற்பொழுது இல்லை. எனவே ஒரே இடத்தில் 100 முதல் 200 நாட்களை நாய்களை கட்டி வைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    தேங்கி கிடக்கும் கோப்பு களை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவல கங்களையும் சீரமைக்க தலா ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 4 மண்டல அலுவலகத்திற்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் .

    முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் கடந்த 2 மாதங்களாக மைனஸ் அடியில் இருந்து வருகிறது. அந்த அணையை தூர் வாரும் காலம் முடிந்து விட்டது. இனி வரும் காலங்களில் அது பற்றி ஆலோசிக்கப்படும்.

    புத்தன் அணையில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை பொது மக்களுக்கு தற்பொழுது சப்ளை செய்து வருகிறோம். ஏற்கனவே சோதனை ஒட்டம் செய்தபோது ஒரு சில இடங்களில் நீர்க்கசிவு இருந்தது. அதை சரி செய்து தற்போது புத்தன் அணை தண்ணீரை பொது மக்களுக்கு வழங்கி வரு கிறோம்.

    மழை கை கொடுத்தால் மட்டுமே, குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். அனைத்து வீடுகளிலும் உறிஞ்சி குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளுடன் கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும். நாகர்கோவில் செட்டி குளம் பகுதியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாக ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெடுஞ்சாலை துறை அனுமதி கிடைத்தவுடன் செட்டி குளம் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படும். செட்டிகுளத்தில் இருந்து சவேரியார்கோவில் செல்லும் சாலையை, இருவழி பாதையாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து கவுன்சிலர் உதயகுமார் கூறும் போது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் கருணாநிதி சிலை, என்.எஸ்.கே. சிலையை வைக்க வேண்டும் என்றார். இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர் சேகர், த.மா.கா கவுன்சிலர் டி. ஆர். செல்வம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் காமராஜர், எம்.ஜி.ஆர் சிலைகளை வைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×