search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் : பொதுமக்களை முட்டி அச்சுறுத்தி வருவதால் பீதி
    X

    கடலூரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் : பொதுமக்களை முட்டி அச்சுறுத்தி வருவதால் பீதி

    • தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருவதால் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்த மாநகரமாக இருந்து வருகின்றது.
    • சாலைகளில் மாடுகள் எந்தவித கட்டுப்பாட்டுகள் இன்றி சுற்றி திரிந்து வருகின்றன.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தின் தலைநகராக கடலூர் இருந்து வருகின்றது. மேலும் கடலூர் மாநகரில் பிரசித்தி பெற்ற கோவில்கள், கடலூர் சிப்காட் பகுதியில் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் அரசு தலைமை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி சென்னையில் இருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய அனைத்து வாகனமும் கடலூர் வழியாக சென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடலூர் வழியாக சென்று வருவதால் எந்நேரமும் போக்குவரத்து மிகுந்த மாநகரமாக இருந்து வருகின்றது.

    மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடலூர் பஸ் நிலையத்திற்கும் வருகை தந்து அங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் முக்கிய நகரப் பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், பஸ் நிலையம் ,செம்மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் எந்தவித கட்டுப்பாட்டுகள் இன்றி சுற்றி திரிந்து வருகின்றன. இதன் காரணமாக கடலூர் முக்கிய சாலைகளிலும், பஸ் நிலையத்திலும் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது மட்டும் இன்றி எந்தவித கட்டுப்பாடும் இன்றி சாலையில் சுற்றி திரியும் மாடுகள் திடீரென்று நடந்து செல்பவர்கள் மீதும் வாகனங்களில் செல்பவர்கள் மீதும் முட்டுவதால் உயிர்பலி ஏற்படும் அபாயமும் நிலவி வருகின்றது. மேலும் சிறுவர், சிறுமிகள் அழைத்துவரும் பெற்றோர்கள் மாடுகளை பார்த்து பீதி அடைந்து செல்வதையும் காண முடிகிறது. சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் சாலை ஓரங்களில் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதால் வியாபாரிகளுக்கும் கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது இதில் மிக முக்கியமாக சாலையில் செல்பவர்களை அடிக்கடி முட்டுவதும் , முட்டுவது போல் நெருங்கி செல்வதும் அனைத்து தரப்பு மக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றது ஆனால் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் மாடுகளை வெளியில் சுற்றி திரிய வைத்து பின்னர் இரவு நேரங்களில் பாதுகாப்பாக தங்கள் மாடுகளை அழைத்து செல்வதையும் காணமுடிகிறது.

    இது சம்பந்தமாக கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, அனுமதி இன்றி சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் கால்நடைகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் எந்தவித அச்சமும் இன்றி கால்நடை உரிமையாளர்கள் பொதுமக்களை அச்சுறித்திவரும் மாடுகளை சாலைகளில் சுற்றி திரிய வைக்கின்றனர். ஆகையால் கடலூர் மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை உடனடியாக பறிமுதல் செய்து அதிகளவில் அபராத தொகை வசூல் செய்து சுற்றி தெரியும் மாடுகளை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×