search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உக்கடம் பஸ் நிலையம் அருகே சாலையில் சுற்றி திரியும் மாடுகள்
    X

    உக்கடம் பஸ் நிலையம் அருகே சாலையில் சுற்றி திரியும் மாடுகள்

    • சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோவை மாநகராட்சியினர் பட்டியில் அடைக்க வேண்டும்.
    • இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் தடுமாறி கீழே விழுவதை அன்றாடம் காண்கிறோம்.

    குனியமுத்தூர்,

    உக்கடம் பஸ் நிலையம் அருகே எந்த நேரமும் பஸ்களும், கார்களும், மோட்டார் சைக்கிள்களும் சென்று கொண்டே இருக்கும்.

    இதனால் அந்த பகுதியில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். அப்பகுதியை கடப்பதற்குள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போதும் போதும் என்றாகி விடும்.

    இப்படி போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் சாலைகளில் வருபவர்கள், மாடுகளை பார்த்து பயந்து, கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் விபத்துக்களில் சிக்கி விடுவதும் வாடிக்கையாகி வருகிறது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    மாடுகளை வளர்ப்பவர்கள் வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும். இது போன்று சாலையில் சுற்றி திரிய விடக்கூடாது. சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோவை மாநகராட்சியினர் பட்டியில் அடைக்க வேண்டும்.

    மேலும் அந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த முடியும். ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் உக்கடம் பஸ் நிலையம் அருகே மாடுகள் சுற்றித் திரிவது மிகவும் கண்டனத்திற்குரியது.

    இந்த நிலையானது தற்போது அல்ல காலகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் தடுமாறி கீழே விழுவதை அன்றாடம் காண்கிறோம். எனவே கோவை மாநகராட்சி விரைந்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×