search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்டத்தில் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்:  ஒரு ஆண்டில் 1,200 புகார்கள் வந்துள்ளன  -பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் வேண்டுகோள்
    X

    மாவட்டத்தில் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்: ஒரு ஆண்டில் 1,200 புகார்கள் வந்துள்ளன -பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் வேண்டுகோள்

    • பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது.
    • ஆன்லைனில் கடன் வாங்குவதற்கு முன்பணம் கட்ட சொன்னால் அவர்களும் போலியாக இருக்க வாய்ப்புள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆன்லைனில் புதுப்புது வழிகளில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்ள் அதிகரித்துள்ளன. குறைந்த முதலீட்டில் அதிக லாபம், பணம் இரட்டிப்பு, செயல்முறை கட்டணம் என பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, 1,200 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், ஆன்லைன் கடன் வழங்குவதாக கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டதாக, 160 புகார்கள், குறைந்த முதலீட்டுக்கு அதிக பணம் எனக்கூறி 140, போலி வாடிக்கையாளர் சேவை மையம் எனக்கூறி, 116, 'பான் கார்டு அப்டேட்', செயல்முறை கட்டணம், ஜி.எஸ்.டி., இவற்றிக்கு முன் பணம் கட்டினால் பெரிய கடன் தொகை எனக்கூறி, 92 புகார்களும் பெறப்பட்டுள்ளன.

    இது போன்ற மோசடிகளில் ஏமாறாமல் இருக்க செல்போனில் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும்போது செயலின் நம்பகத்தன்மை, அதில் சுயவிவரங்களை கொடுக்கலாமா என ஆராய வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்யும் முன் நிறுவனத்தின் உண்மைதன்மையை அறிய வேண்டும்.

    ஆன்லைனில், 99 சதவீத நிறுவனங்கள் போலியாக உள்ளன. நாம் செலுத்தும் பணத்திற்கு முதலில் லாபம் தருவது போல் பணம் கொடுத்து, முதலீடு செய்யும் பெரிய தொகையை ஏமாற்றி விடுவார்கள். எனவே ஆன்லைன் முதலீட்டை தவிர்ப்பது நல்லது. ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள அவர்களது இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

    'கூகுள் கஸ்டமர் கேர்' என தேடி அந்த எண்களை தொடர்பு கொண்டால் மோசடி நிகழ வாய்ப்புள்ளது. 'பான்கார்டு' விவரங்களை பதிய செல்போனுக்கு எந்த வங்கியும்

    குறுஞ்செய்தி அனுப்புவதில்லை. அவ்வாறு வருபவை அனைத்தும் போலியானது. கடன் தருவதாக கூறும் நிறுவனத்தின் உண்மை தன்மையை அறிந்த பின்னரே கடனுக்குமுயற்சிக்க வேண்டும். ஆன்லைனில் கடன் வாங்குவதற்கு முன்பணம் கட்ட சொன்னால் அவர்களும் போலியாக இருக்க வாய்ப்புள்ளது.

    மேற்கண்ட வகைகளில் பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்தால், 1930 என்ற 'டோல்பிரி' எண் அல்லது இணையதள முகவரியில் புகார் அளிக்கவும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசிலும் நேரில் புகார் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04343-294755 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×