search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேரிக்குடியிருப்பு  கற்குவேல் அய்யனார் கோவிலில் நாளை மறுநாள் கள்ளர் வெட்டு -சென்னை, மதுரையில் இருந்து பக்தர்கள் வரத் தொடங்கினர்
    X

    சுவாமி கற்குவேல் அய்யனார் அருள்பாலிக்கும் காட்சி.

    தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் நாளை மறுநாள் கள்ளர் வெட்டு -சென்னை, மதுரையில் இருந்து பக்தர்கள் வரத் தொடங்கினர்

    • கற்குவேல் அய்யனார் கோவிலில் வருடந்தோறும் கள்ளர் வெட்டு திருவிழா கொண்டாடப்படும்.
    • இன்று 28-ம் திருநாள் இரவு 9 மணிக்கு மாக்காட்பூ தீபாராதனை நடக்கிறது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு குதிரை மொழிதேரிபூரில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.

    இங்கு வருடந்தோறும் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 17-ந் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானத்துடன் தொடங்கியது.

    தினசரி சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் தினசரி வில்லிசையும், தொடர்ந்து நடந்து வந்தது. இன்று 28-ம் திருநாள் காலை 11 மணிக்கு ஐவர்ராஜா மாலை அம்மன் பூஜையும், மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும், இரவு 9 மணிக்கு மாக்காட்பூ தீபாராதனையும் நடக்கிறது.

    நாளை காலை 10 மணிக்கு கோவில் முன்பு மகளிர் வண்ண கோலம் இடும் நிகழ்ச்சி, காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு விசேட அபிஷேகம், மாலை 6 மணிக்கு நாட்டில்நல்ல கனமழை பொழிந்து நாடுசெழிக்க வேண்டி மாவிளக்குபூஜை இரவு , 7 மணிக்கு புஷ்பாஞ்சலி தொடர்ந்து திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு உற்சவர் திருவீதி உலாவும் கோவில் கலையரங்கத்தில் இரவு 10 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    16-ந் தேதி காலை 6 மணிக்கு 108 பால்குட ஊர்வலம், காலை 9 மணிக்கு கற்குவேல் அய்யனார் பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தாமிரபரணி தீர்த்தம் எடுத்து மேளதாளத்துடன் வருதல், காலை 10 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பகல் 12 மணிக்கு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள், மாலை 4 மணிக்கு சுவாமிகள் கள்ளர் வெட்டுக்கு புறப்படுதல். சுமார் 4.30 மணி அளவில் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மண் தேதயில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் போட்டி போட்டுபுனிதமணல் எடுத்து செல்வார்கள். இந்த மணலை பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். நல்ல செயல்கள் நடக்கும் போதும் இந்த மணலை பயன்படுத்துவார்கள். சிறப்பு நிகழ்ச்சியாக சமய சொற்பொழிவு, வில்லிசை, திரைப்பட இன்னிசை கச்சேரி ஆகியன நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் குடும்பத்துடன் வந்து 3 நாள் கோவிலில் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்து விட்டு புனித மணல் எடுத்துச் செல்வார்கள். அரசு பேருந்து சார்பில்சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து சென்னை, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் கோவிலுக்கு வரத்தொடங்கி உள்ளனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்பு மணி, உதவி ஆணையர் சங்கர், கோவில் தக்கார் அஜித், செயல் அலுவலர் காந்திமதி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×