search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம்; பல்லக்கு சேவை
    X

    தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் வீதிஉலா நடைபெற்றது.

    தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம்; பல்லக்கு சேவை

    • 5 ஆயிரம் மாணவ- மாணவிகள் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு நாட்டிய திருவிழா நடந்தது.
    • நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், ஆதீன நிர்வாகிகள் பலர் கலந்து கொன்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் குருபூஜை விழா மற்றும் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாள் 11-ம்நாள் திருவிழாவாக ஆதீனகர்த்தர் சிவிகை பல்லக்கில் பட்டின பிரவேசம் செய்யும் நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது.

    தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை பக்தர்கள் மற்றும் மடத்து சிப்பந்திகள் சிவிகை பல்லக்கில் நான்கு வீதிகளில் சுமந்து வந்தனர். இறுதியாக ஆதீன மடாதிபதியின் ஞான கொலுக்காட்சி நள்ளிரவு நடைபெற்றது.

    பீடத்தில் அமர்ந்த ஆதீன மடாதிபதிக்கு திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிராயன் சுவாமிகள் பாவனை அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பித்தார். இறுதியாக விழாவில் பங்கேற்ற சூரியனார்கோயில் ஆதீனம், திருப்பனந்தாள் இளவரசு உள்ளிட்டவர்களுக்கு தருமபுரம் ஆதீன குருமா சன்னிதானம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    விடியவிடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர். இதில் கடந்த மாதம் சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் 5000 மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் பங்கேற்று நடைபெற்ற நாட்டிய திருவிழாவை உலக சாதனை நிகழ்ச்சியாக டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டு பதிவு செய்தது.அதன் தலைவர் கிருத்திகா தேவி உலக சாதனை படைத்த சான்றிதழ்களை தருமபுரம் ஆதீனத்திடம் நேரில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஆதீன நிர்வாகிகள் என திரளாக கலந்து கொன்டனர்.

    Next Story
    ×