search icon
என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • மலை முகடுகளை பனி மூட்டங்கள் சூழ்ந்துள்ளது.
    • நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    கடந்த அக்டோபர் மாதம் ஆப் சீசன் தொடங்கிய நிலையில் வடமாநிலங்களில் இருந்து தேனிலவு கொண்டாட ஏராளமான இளம்ஜோடிகள் வந்தனர்.

    தற்போது பனி காலத்தின் தொடக்கமாக பல்வேறு பகுதிகளில் மலை முகடுகளை பனி மூட்டங்கள் சூழ்ந்துள்ளது.

    அதிகாலை நேரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இந்த காட்சிகளை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர்.

    நகரில் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    மேலும் கோக்கர்ஸ்வாக், தூண்பாறை, குணாகுகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, ரோஜாபூங்கா, செட்டியார் பூங்கா, பிரைண்ட் பூங்காவிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி பகுதிகளுக்கும் படையெடுத்தனர். அங்கு எலும்பள்ளம் ஏரி, முயல் ஆராய்ச்சி பண்ணை ஆகியவற்றையும் கண்டு ரசித்தனர்.

    அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட பட உள்ள நிலையில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தனியார் விடுதிகளில் பல்வேறு வண்ண அலங்காரங்கள் செய்யும் பணி தொடங்கி உள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல்வேறு வகையான கேக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

    • தி.மு.க.வில் கூட்டணி தொகுதி பங்கீடு உண்டு.
    • மக்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    பொதுமக்களால் கொடுக்கப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கப்படும். விடுபட்ட மகளிர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலே முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அனைத்து கிராமத்திற்கும் சாலை வசதி, பஸ் வசதி, குடிதண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றார்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

    தி.மு.க.வில் கூட்டணி தொகுதி பங்கீடு உண்டு. ஆனால் ஆட்சியில் பங்கீடு கிடையாது. தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் வீடுகள் சிறப்பாக கட்டப்பட்டு வருகிறது. மக்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு பத்மாவதி ராஜகணேஷ், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, அருள் கலாவதி, ஆத்தூர் தாசில்தார் முத்துமுருகன், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் காணிக்கைசாமி, பாப்பாத்தி, செல்வி காங்கேயன், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முருகேஸ்வரி தனது விண்ணப்பத்தில் வடமதுரையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட தனது வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டிருந்தார்.
    • அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ரெட்டியபட்டி, காஞ்சி பெரியவர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 43). முறுக்கு வியாபாரி. இவரது மனைவி முருகேஸ்வரி (40). இந்த தம்பதிக்கு கண்ணன், மகேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் முருகேஸ்வரி கடந்த ஆண்டு தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து இருந்தார். தொடர்ந்து அரசு தரப்பில் இருந்து முருகேஸ்வரியின் செல்போன் எண்ணுக்கு உங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீங்கள் மகளிர் உரிமைத்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.

    இதற்கிடையே முருகேஸ்வரி தனது விண்ணப்பத்தில் வடமதுரையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட தனது வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டிருந்தார். ஆனால் முருகேஸ்வரி வங்கிக் கணக்கின் கடைசி எண்ணை தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த 14 மாதங்களாக அதே வங்கியில் கணக்கு வைத்துள்ள காணப்பாடியைச் சேர்ந்த 60 வயது முதியவருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முருகேஸ்வரியின் செல்போன் எண்ணுக்கு பணம் வரவு வைக்கப்பட்டதாக குறுந்தகவல் மட்டும் வந்துள்ளது.

    பின்னர் அந்த முதியவர் முதல் 3 மாதங்கள் மட்டும் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து முருகேஸ்வரியிடம் கொடுத்தார். அதன்பின்னர் அவர் பணத்தை தரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி மகளிர் உரிமை தொகை பணத்தை மீட்டு தருமாறு முருகேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.

    • பாராளுமன்றத்தில் பலவிதமான மோசமான திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
    • தனிநபர் பிரச்சனைக்கு எல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களிடம் அதானி ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்து தான் முதலீட்டை ஏற்றுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அதானி, அவரது மருமகன் உட்பட 7 பேர் மீது பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இவ்வளவு பெரிய முறைகேடு நடந்ததை அங்குள்ள பங்கு சந்தை நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இதனை கண்டு கொள்ளவில்லை. ஏன் இவ்வளவு பெரிய முறைகேட்டை இவர்கள் கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்க நிறுவனம் சொன்ன பின்பாவது மத்திய அரசு ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கும், எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அந்த நிறுவனம் சார்பில் பதில் கூறப்பட்டுள்ளது. இதனை மோடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

    அதானி என்பது முகம் தான், பின்னால் இருப்பது நரேந்திர மோடி தான். அவரது பினாமியாக இருப்பதால்தான் அதானி மீது எவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் மோடி அரசாங்கம் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. அவர்கள் மீது சம்மன் அனுப்புவதில்லை. விசாரணைக்கு கூட அழைப்பது இல்லை. எனவே மத்திய அரசு உடனடியாக அதானியை கைது செய்ய வேண்டியும், முறையான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.

    இந்த முறைகேடு பட்டியலில் தமிழ்நாடு அரசு இடம் பெற்றுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, நாங்கள் அதானியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

    தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை மத்திய அரசு வாங்கி, மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். நான் தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்வது, தமிழ்நாடு பெயர் அந்தப் பட்டியலில் வந்துள்ளதால் இது சம்பந்தமாக தமிழக அரசு விசாரணையை தெளிவுபடுத்த வேண்டும். முழுமையான விவரங்கள் என்னவென்று தெரிவிக்க வேண்டும்.

    பாராளுமன்றத்தில் பலவிதமான மோசமான திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு பாராளுமன்றத்தில் அறுதி பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் கூட ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டத்தை முன்மொழிவதாக கூறுகின்றனர்.

    ஏதோ ஒரு முறைகேடு மூலமாக பாராளுமன்றத்தில் இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சதி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற துடிக்கிறது.

    தமிழக சட்டமன்றம் விரைவில் கூட உள்ளது. தமிழக சட்டமன்றத்தை 3 அல்லது 4 நாட்கள் நடத்துவதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் தோழமைக் கட்சிகள் கருத்துக்களை பேசுவதற்கும், நாட்டில் உள்ள பல முக்கியமான பிரச்சனைகளை விவாதிப்பதற்கும் உரிய அவகாசத்துடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டும். முதலமைச்சரும் சபாநாயகரும் சட்டமன்றத்தை போதுமான அவகாசம் கொடுத்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் உள்ள தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பினை சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

    பள்ளியில் ஆசிரியர்கள், நீதிமன்றத்தில் வக்கீல்கள், மருத்துவமனையில் டாக்டர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் வன்மையான கண்டனத்துக்குரியது. இது தனிமனித விரோதம் காரணமாக நடைபெறுகிறது. தனிநபர் பிரச்சனைக்கு எல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது. போதைப்பொருள் ஒழிப்பதில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் இந்த விஷயத்தில் மெத்தனமாக உள்ளனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிக்கட்டான்பட்டியில் மத்திய அரசு 2000க்கும் மேற்பட்ட இடங்களில் கனிம வளங்களை எடுப்பதற்கு ஏலம் விட்டுள்ளது. அந்த இடத்தை பல்லுயிர் பாதுகாப்பு மையம் என்கின்ற முறையில் தமிழக அரசு 6 மாதத்திற்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.

    2026 தேர்தலில் கூட்டணிகள் மாறும் என பலர் அவர்கள் யூகத்தின் அடிப்படையில் கூறி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. கூட்டணி மாறுவதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை .

    அ.தி.மு.க.வில் உள்ள தலைவர்களுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் உள்ளது. அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் தோற்றத்துக்கு சரியான கூட்டணி இல்லாதது தான் காரணம் என கூறுகின்றனர்.

    மீண்டும் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு சென்றால் அ.தி.மு.க. என்ற ஒரு கட்சியே இருக்காது.

    முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு மற்றும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என பேசி உள்ளார். பொத்தாம் பொதுவாக சொல்லாமல் உங்களிடம் யார் பணம் கேட்டார்கள் என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

    யார் பணம் கேட்டார்கள்? நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சச்சிதானந்தம் எம்.பி. மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • ஒரு புள்ளியை வைத்துவிட்டு பெரிய கோலம் போடமுடியாது.
    • அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சியை கைப்பற்றிவிட முடியாது என்றார்.

    திண்டுக்கல்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து ஆயக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:

    தேர்தலில் அதிக சீட் வேண்டும் என்பதற்காகவோ, பணம் காசு வேண்டும் என்பதற்காகவோ பழனி மலைக் கோயிலுக்கு வரவில்லை. என் முன்னோர் வாழ்ந்த இடம் என்பதனால் அதனை காண்பதற்காகவே வந்துள்ளேன்.

    நான் அரசியல் களத்திலே அடியெடுத்து வைத்தபோது எழுப்பிய முழக்கம், எளிய மக்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பது. அதை அவ்வளவு எளிதில் எட்டிப் பிடித்துவிட முடியாது.

    கடந்த 20 ஆண்டுக்கு முன்பு "எனக்கும் முதல்-அமைச்சர் கனவு உண்டு" என்று பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தேன். அதாவது, எளிய மக்களும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதுதான்.

    இன்றைக்கு நாம் முதல் புள்ளியை வைத்திருக்கிறோம். நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைத்தால்தான் கோலம் போட முடியும். ஒரு புள்ளியை வைத்துவிட்டு பெரிய கோலம் போடமுடியாது.

    கட்சியை தொடங்காமலே பலர் ஆட்சிக்கு வர ஆசைப்படுகின்றனர். ஆனால் நாம் அங்குலம், அங்குலமாக வளர்ந்து வருகிறோம்.

    தமிழகத்தில் தவிர்க்க முடியாத, அரசியல் விதிகளை திருத்தக்கூடிய கட்சியாக நாம் வலிமை பெற்றுள்ளோம் என தெரிவித்தார்.

    • திருமாவளவனுக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார்.
    • கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சி நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்தார்.

    அப்போது அவர் அங்குள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    இதைதொடர்ந்து, மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் தரிசனம் மேற்கொண்டார்.

    கோவிலுக்கு வருகை தந்த திருமாவளவனுக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார். கோவிலை விட்டு வெளியே வந்த அவரை கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர்.

    அவர்களின் குறைகளை திருமாவளவன் கேட்டறிந்தார். பொது மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

    • பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் பிரின்ஸ் என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார்.
    • போலி டாக்டர்கள் கொடைக்கானல் மலை கிராமங்களில் இதுபோல பல்வேறு இடங்களில் கிளீனிக் வைத்து செயல்படுகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகில் உள்ள கவுஞ்சி ராஜபுரத்தை சேர்ந்தவர் சர்வேஸ் (வயது 30) விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி (24). இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் 1 ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கருவுற்ற பிரியதர்ஷினி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 20 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவர் வீடு திரும்பினார்.

    சில நாட்களிலேயே பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் பிரின்ஸ் என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு மருந்து மாத்திரைகளை பிரின்ஸ் வழங்கி உள்ளார். இவர் முறையான மருத்துவம் படிக்காமல் தனது வீட்டிலேயே கிளீனிக் போல நடத்தி அப்பகுதி மக்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே பிரின்ஸ்சிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் வலி குறைவதற்காக அதிக வீரியம் கொண்ட ஊசியை அவருக்கு செலுத்தினார். சற்று நேரத்தில் பிரியதர்ஷினிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தபோது அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கொடைக்கனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்த பிரின்சை தேடி வருகின்றனர். அவர் முறையான மருத்துவம் படிக்காமல் பல வருடங்களாக கிராம மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். தற்போது அவரது சிகிச்சையால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் மற்றும் மருத்துவ துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    போலி டாக்டர்கள் கொடைக்கானல் மலை கிராமங்களில் இதுபோல பல்வேறு இடங்களில் கிளீனிக் வைத்து செயல்படுகின்றனர். அரசு ஆஸ்பத்திரிக்கு நீண்ட தூரம் செல்லவேண்டும் என்பதால் அருகில் கிடைக்கும் மருத்துவத்தை அப்பகுதி கிராம மக்கள் எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஒருசில டாக்டர்களும் உதவி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு கொடைக்கானல் மலை கிராமங்களில் போலி டாக்டர்களின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் வெட்டப்பட்டது, தஞ்சை பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்டது உள்ளிட்டவை வருத்தமளிக்கிறது.
    • பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் ஏழை சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பழனி:

    பழனியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பழனிக்கு வருகை தந்தார். பழனி தேவஸ்தான தங்கும் விடுதியில் இரவு தங்கிய திருமாவளவன் இன்று அதிகாலையிலேயே பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி சித்தர் ஆசிரமத்திற்கு சென்ற திருமாவளவன் தொட்டிச்சி அம்மனை வழிபாடு செய்தார். அதன்பின் போகர், பழனி ஆதினம், சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் மடத்திற்கு சென்றார். அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திருமாவளவன் புலிப்பாணி சுவாமிகளிடம் ஆசிபெற்றார்.

    அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

    ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் வெட்டப்பட்டது, தஞ்சை பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்டது உள்ளிட்டவை வருத்தமளிக்கிறது. இந்த சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்பாடுகளால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்குச் செல்வதை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு ரேஷன் அரிசி கடத்தலால் ரூ.1900 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்தது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என தெரியவில்லை. அவ்வாறு அவர் தெரிவித்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக தடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் ஏழை சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு மட்டுமாவது அனுமதி அளித்து அவர்களது வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனி பகுதியில் உள்ள அருந்ததியர் சமுதாயத்திற்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதையும் மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.

    ஆட்சி அதிகாரத்தில் வி.சி.க. விற்கு பங்கு என்று துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளது அவரது சொந்த விருப்பமாகும். ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு, எங்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் ஒத்துழைப்போடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கும்போது அது நிறைவேறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வருகிற தேர்தலில் விஜயுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் வணக்கம் தெரிவித்து சென்றார்.

    இதனை தொடர்ந்து பழனி அருகே நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வி.சி.க. சார்பில் கட்சி கொடி ஏற்றிவைத்து மூத்த நிர்வாகிகளின் படங்களை திறந்துவைத்தார். அவரிடம் வியாபாரிகள், பொதுமக்கள் பலர் மனுக்களை அளித்தனர்.

    • பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதி.
    • மழையளவு குறைந்து கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழையும் கடும் பனிமூட்டமும் நிலவி வந்தது. இந்த சூழலை பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் இன்று காலையில் சிறிது நேரம் பனிமூட்டம் நிலவியது. அதனைத் தொடர்ந்து பகல் பொழுதிலும் பனிமூட்டம் நீடித்தது. இதனால் நகர் முழுவதும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

    இதனால் இருசக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    நடந்து செல்பவர்கள் மீதும் பனி விழுவதால் உடல் நடுங்கியபடி செல்கின்றனர். தொடர்ந்து பனிமூட்டம் குறையாமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    • சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
    • கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதிகாலையில் வந்தார். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர் அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

    அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டதுடன் தேவஸ்தான ஊழியர்கள் பிரசாதங்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து போகர் சன்னதி, புலிப்பானி ஆசிரமம் ஆகியவற்றுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

    அதன் பின்பு தனியார் விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது உதவியாளருடன் சென்று விட்டார்.

    • போதையில் குளிரில் நடுங்கிய வாலிபருக்கு டீ வாங்கிக்கொடுத்து தெளிய வைத்தனர் காவல்துறையினர் .
    • விசாரணையில் அவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு முக்கிய சுற்றுலா இடமாகவும், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடமாகவும் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது.

    இந்தநிலையில் நேற்று நட்சத்திர ஏரியில், வாலிபர் ஒருவர் நீச்சல் அடித்து கொண்டு இருந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மற்றும் படகு ஓட்டுனர்கள் அவரை வெளியே வருமாறு சத்தம் போட்டனர். இதையடுத்து வெளியே வந்த வாலிபர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது, காப்பாற்ற வந்தவர்களை பார்த்து நானும் "மதுரைக்காரன்டா"என பேசிய வாலிபரிடம்.. ஊருக்கு கிளம்பு என்று சொன்னவுடன் அழுதார். இதையடுத்து போதையில் குளிரில் நடுங்கிய வாலிபருக்கு டீ வாங்கிக்கொடுத்து தெளிய வைத்தனர் காவல்துறையினர் .

    இதையடுத்து விசாரணையில் அவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இவர், நட்சத்திர ஏரியில் குதித்து நீச்சல் அடித்ததாக கூறினார். பின்னர் போலீசார் அவருக்கு அறிவுரை கூறி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பேராசிரியர் ரங்கநாதன் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் மாணவர்களிடம் பேசி வந்துள்ளார்.
    • மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்கலை துணைவேந்தர் விசாரணை மேற்கொண்டார்.

    திண்டுக்கல் காந்தி கிராம நிகர்நிலை பல்கலைகழக மாணவர்களிடம் சமஸ்கிருதம் படிக்க சொல்வதாகவும், திராவிடம் குறித்து இழிவாக பேசுவதாகவும் பேராசிரியர் ரங்கநாதன் மீது மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

    சுகாதார ஆய்வாளருக்கான பயிற்சி வழங்கும் பேராசிரியர் ரங்கநாதன் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் மாணவர்களிடம் பேசி வந்துள்ளார் என்றும் அவர் ஒரு வாட்சப் குழுவை ஆரம்பித்து மாணவர்களை அதில் சேர்த்து பாஜகவுக்கு ஆதரவான பதிவுகளை பகிர்ந்து வருவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

    மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்கலை துணைவேந்தர் விசாரணை மேற்கொண்டார். அதில் புகாரில் உண்மை இருந்ததால் பேராசிரியர் ரங்கநாதனை ஆறு மாதம் விருப்ப ஓய்வில் செல்ல துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

    ×