என் மலர்
உள்ளூர் செய்திகள்
900 ஆண்டுகள் பழமையான அரிய புத்தர் சிலை கண்டுபிடிப்பு
- தேவரியம்பாக்கத்தில் தியான நிலையில் உள்ள இந்த புத்தர் சிலை பெருமைக்குரியது.
- காலம் கி.பி 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே உள்ளது தேவரியம்பாக்கம் கிராமம். இங்குள்ள பெருமாள் கோவிலில் வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அழகிய வெண்மை நிற பளிங்குக் கல்லால் ஆன அமர்ந்த நிலையில் உள்ள புத்தரின் சிலை ஒன்று பெருமாள் கோவிலில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சிலையில் புத்தரின் கண்கள் மூடிய நிலையில் தியானத்தில் உள்ளார். சுமார் ஒரு அடி உயரமுள்ள புத்தர் சிலையின் காதுகள் இரண்டும் தோள்வரை நீண்டுள்ளன. மூக்கு சற்று சேதமடைந்த நிலையிலும் சுருள் சுருளான தலைமுடியுடனும், இடப்புறத் தோள் பட்டை முதல் இடுப்பு வரை சீவர ஆடையுடனும் காணப்பட்டது. சிலையின் தலை பகுதியில் சுருள் முடி போன்ற அமைப்பும், பின்புற மேலாடை (சீவர ஆடை) நேர்த்தி யாகத் தெரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் சிலை சுமார் 900 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் கூறும்போது, தேவரியம்பாக்கத்தில் தியான நிலையில் உள்ள இந்த புத்தர் சிலை பெருமைக்குரியது. கி.மு. 3-ம் நூற்றாண்டில் பல்வேறு போர்களை தொடுத்த பேரரசர் அசோகர் தனது கடைசி போரான கலிங்கத்து போரை நடத்திய பின் போர்களை கைவிட்டு உலக அமைதிக்கான கவுதம புத்தரின் வழியை பின்பற்றி உலகெங்கும் புத்த அமைதி கோபுரங்களை நிறுவி உலகில் அமைதியை உருவாக்க முயன்றார்.
அத்தகைய கருத்தோடு ஒத்து போகும் வகையில் இச்சிலையின் அமைப்பு அமைந்து இருப்பது பெறும் சிறப்புக்குரியதாகும். இந்த சிலை 900 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காலம் கி.பி 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. இதனை உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், உதவி கல்வெட்டாய்வாளர்கள் நாகராஜன் மற்றும் பிரசன்னா ஆகியோரும் உறுதி செய்தனர் என்றார்.