search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை தீபாவளி கொண்டாட்டம்; நெல்லை நகர வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்- புத்தாடை-பட்டாசு விற்பனை மும்முரம்

    • புத்தாடை வாங்குவதற்காக நெல்லை நகர கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    • கடைகளுக்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பொருட்கள் வாங்க வந்திருந்தனர்.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகை நாளை(திங்கட்கி ழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி கட்ட விற்பனை இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நாளை தீபாவளியை யொட்டி பொதுமக்கள் அதிகாலையில் புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். இதற்காக கடந்த 2 நாட்களாக இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக நெல்லை நகர கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கடைசி நாளான இன்றும் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

    மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட இடங்களில் பஜார் பகுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. இதனால் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக போடப்பட்டு இருந்தனர்.

    கூட்டம் அதிகரிப்பு

    மாநகர பகுதியில் நேற்று நள்ளிரவு வரையிலும் தீபாவளி விற்பனை சூடுபிடித்து காணப்பட்டது. பாளை சமாதானபுரம் மார்க்கெட் முதல் வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, சந்திப்பு, டவுன் ரதவீதிகள் வரை கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    ஜவுளிக்கடை மற்றும் பட்டாசு கடைகளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பொருட்கள் வாங்குவதற்காக வந்திருந்தனர். இதேபோல் பலகார கடைகள், பேக்கரிகள், பேன்சி கடைகள் மற்றும் மளிகை கடைகள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    போலீஸ் பாதுகாப்பு

    இதனால் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையொட்டி மாநகர பகுதியில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். குறிப்பாக டவுன் ரதவீதிகள் மற்றும் வண்ணார்பேட்டையில் உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுதவிர அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். சில இடங்களில் போலீசார் மோட்டார் சைக்கிள்களில் சென்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    பயணிகள் கூட்டம்

    சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் ரெயில் மூலமாக இன்று காலை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். இதனால் அதிகாலை முதலே அங்கும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இதனையொட்டி பட்டாசு ஏதேனும் கொண்டு வருகிறார்களா? என்பதை ரெயில்வே போலீசார் கண்காணித்தனர். வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்காக சிறப்பு ரெயில்களும், கூடுதல் பஸ்களும் விடப்பட்டு இருந்தது.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அங்கும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆலங்குளத்தில் தென்காசி பிரதான சாலை, அம்பை சாலையில் உள்ள ஜவுளிக்கடைகளில் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தன.

    சங்கரன்கோவில் டவுன் ரதவீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ராஜபாளையம் சாலை, கழுகுமலை சாலைகளில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் சாலையில் இன்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பிரையண்ட் நகர், அண்ணா நகர் மற்றும் புதிய பஸ் நிலையங்களில் பொதுமக்கள் அலைமோதியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் டபுள்யூஜிசி ரோடு, சிவன் கோவில் பகுதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவித்தன. இதேபோல் திருச்செந்தூர், கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, விளாத்திகுளம், எட்டயபுரம், சாத்தான்குளம், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம் உள்பட புறநகர் பகுதிகளிலும் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    Next Story
    ×