search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்வாய்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம்: நெல்லையில் வெள்ள பாதிப்பு குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை - கலெக்டர் விஷ்ணு பேட்டி
    X

    வி.எம்.சத்திரம் அருகே மூர்த்தி நயினார்குளத்தில் கரைகள் பலப்படுத்தப்படுத்தும் பணியை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்த காட்சி. அருகில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி.

    கால்வாய்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம்: நெல்லையில் வெள்ள பாதிப்பு குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை - கலெக்டர் விஷ்ணு பேட்டி

    • வி.எம்.சத்திரம் அருகே மூர்த்தி நயினார்குளத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
    • நெல்லை மாவட்டம் முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை யொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்து வருகிறார்.

    கலெக்டர் ஆய்வு

    வி.எம்.சத்திரம் அருகே மூர்த்தி நயினார்குளத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி களை இன்று கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்டுப்பாட்டு அறை

    நெல்லை மாவட்டம் முழுவதும் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது. 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் புகார் செய்ய 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் தேங்கும் மழை நீர் குறித்து புகார் செய்வதற்காக பிரத்யேக செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

    நீர் இருப்பு

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 3 வகைகளில் வெள்ளப் பெருக்கு ஆபத்து ஏற்படலாம். இதில் தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை 60 ஆயிரம் அடி வரை கொள்ளளவு கொண்டது. மேலும் தற்போது பாபநாசம் அணையில் 42 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணையில் 29 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    எனவே கனமழை பெய்தாலும் ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

    கடந்த ஆண்டு மாநகர பகுதியில் உள்ள குளங்களில் இயற்கையான திசை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் தற்போது அவற்றை சரி செய்துள்ளோம். மேலும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேய்ந்தான்குளமும் தூர்வாரப்பட்டு உள்ளது.

    மழை குறைவு

    இதனால் மாநகர பகுதியில் வெள்ளப் பெருக்கு பாதிப்பு குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. நெல்லை மாவட்டத்தில் தற்போது வரை மழை பாதிப்பு இல்லை. கடந்த ஆண்டை விட தற்போது 60 சதவீதம் மழை குறைவாகவே பெய்து உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் குளங்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் 20 சதவீதம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    மானூர், ராதாபுரம் வட்டார பகுதிகளில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளது. இந்த வட்டாரங்கள் 'ரெட் பிளாக்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக 3 புதிய திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் இடங்கள் என 74 இடங்கள் கண்டறியப்பட்டிருந்தன. தற்போது அவை 63 ஆக குறைந்துள்ளது.

    பொதுமக்கள் கால் வாய்களில் குப்பைகளை கொட்டுவதால் மழை நீர் செல்லும் பாதை அடைத்து வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கால்வாய்களில் குப்பை களை கொட்ட வேண்டாம் என பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மாரியப்பன், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், பேரிடர் மீட்பு தாசில்தார் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×