என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இ-பாஸ்: சுற்றுலாபயணிகள் வருகை குறைவால் மலர் கண்காட்சி நுழைவுக்கட்டணம் குறைப்பு
- இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
- கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.
ஊட்டி:
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே ஊட்டி, கொடைக்கானல் என்பது மிகவும் முக்கியமானது.
இங்குள்ள இயற்கை காட்சிகள், அருவிகள், எண்ணற்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் குளு, குளு கால நிலையை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஊட்டி, கொடைக்கானலில் கோடைவிழா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டு மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்பட பல்வேறு வகையான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவருமே இ-பாஸ் பெற்று சென்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 10-ந் தேதி மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியையொட்டி பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் பூத்து குலுங்கி அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்து வருகிறது.
இதுதவிர 2 லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு மலைரெயில், டிஸ்னி வேர்ல்டு, மற்றும் பல்வேறு மலர் அலங்காரங்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.
வழக்கமாக கோடை மாதம் மற்றும் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் இந்த மாதம் முழுவதும் நீலகிரி மாவட்டமே களைகட்டி காணப்படும். வியாபாரமும் படுஜோராக நடந்து வரும்.
ஆனால் இந்த ஆண்டு இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. கண்காட்சி தொடங்கி இன்றுடன் 5 நாட்கள் ஆகிறது. ஆனால் மலர் கண்காட்சியை பார்வையிட ஒவ்வொரு நாளும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வருகின்றனர். அதிகபட்சமாக கடந்த 12-ந் தேதி 21 ஆயிரம் பேர் வந்திருந்தனர். மற்ற நாட்களில் அதனை விட மிகவும் குறைவாகவே வந்துள்ளனர்.
சுற்றுலாபயணிகள் வருகை குறைவு காரணமாக மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.125 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊட்டி வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகி பரூக் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் நீலகிரியில் நடக்கும் கோடைவிழாவை காண அனைத்து பகுதிகளிலும் இருந்து எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். இதனால் இந்த ஒரு மாதம் முழுவதும் நீலகிரியில் வியாபாரமும் நன்றாக நடக்கும்.
வழக்கமாக கோடை விழாவின் போது நடக்கும் மலர் கண்காட்சியை பார்க்க ஏராளமானோர் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. இங்குள்ளவர்களுக்கு எளிதாக இ-பாஸ் கிடைத்து விடுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு விண்ணப்பித்த உடன் இ-பாஸ் கிடைப்பதில்லை. பலமுறை முயற்சி செய்த பின்னரே இ-பாஸ் கிடைப்பதாகவும், அதானாலேயே பலரும் இங்கு வருவதை தவிர்த்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகை குறைவு மற்றும் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாவை நம்பி நடந்து வரும் அனைத்து தொழில்களும் பாதிப்படைந்துள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் அதனை நம்பி நடக்கும் வியாபாரம் முற்றிலும் களை இழந்து விட்டது. தொழிலாளர்களும் கடும் பாதிப்படைந்துள்ளனர் என்றனர்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதனை பார்வையிட சுற்றுலாபயணி கள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்த்து வியாபாரிகள் காத்து இருக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்